Paristamil Navigation Paristamil advert login

டிஜிட்டல் கைது மோசடியை தடுக்க இணைந்து செயல்படுங்கள்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டிஜிட்டல் கைது மோசடியை தடுக்க இணைந்து செயல்படுங்கள்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

5 ஆவணி 2026 புதன் 07:41 | பார்வைகள் : 394


டிஜிட்டல் கைது உள்ளிட்ட இணைய நிதி மோசடிகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இழந்த பணத்தை மீட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். இதற்காக வங்கிகள், மாநில அரசுகள், போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.

நாடு முழுவதும், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் நடக்கும் நிதி மோசடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலீஸ், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், மொபைல் போன் வீடியோ அழைப்பு மூலம் மக்களை மிரட்டி பணம் பறிப்பதே டிஜிட்டல் கைது எனப்படுகிறது. குறிப்பாக, மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. நன்கு படித்தவர்களும், இந்த மோசடியால் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா அடங்கிய அமர்வில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சைபர் குற்றங்கள் மற்றும் முடக்கப்பட்ட அல்லது போலி வங்கி கணக்குகள் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை கையாள, ரிசர்வ் வங்கி உடனடியாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து அனைத்து வங்கிகளுக்கும் வழங்க வேண்டும். இதை அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்ப வேண்டும். சைபர் மோசடிகளால் பணத்தை இழந்தவர்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

சைபர் மோசடி குறைதீர்ப்பு நடவடிக்கை மூலம் மாநில மற்றும் வங்கி வாரியாக தீர்க்கப்பட்ட விபரங்களை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். மாநில மற்றும் வங்கிகள் மூலம் புகார்கள் எப்படி தீர்க்கப்படுகின்றன என்பது, இந்த தரவுகள் மூலம் நமக்கு தெரிய வரும். சைபர் மோசடி புகார்களில் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து, அவர்களின் பணத்தை விரைவாக மீட்டு தரும் புதிய அமைப்பை, அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இழந்த பணத்தை எவ்வாறு மீண்டும் பெறுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். டிஜிட்டல் கைது மோசடிகளை தடுக்க வங்கிகள், நிதி நிறுவனங்களுடன், மத்திய அரசால் அமைக்கப்பட்ட துறைசார் கமிட்டிகள் கலந்தாலோசிக்க வேண்டும். மேலும், ஏமாற்றப்பட்ட பணத்தை மீட்கும் வழிகள் குறித்தும் ஆராய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'டிஜிட்டல் கைது' முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு மிக கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.