Paristamil Navigation Paristamil advert login

நீதிமன்ற அவமதிப்பு வார்த்தையை கேட்டு நடுங்கும் காலம் மலையேறிவிட்டது: ஐகோர்ட்

நீதிமன்ற அவமதிப்பு வார்த்தையை கேட்டு நடுங்கும் காலம் மலையேறிவிட்டது: ஐகோர்ட்

6 ஆவணி 2026 வியாழன் 08:49 | பார்வைகள் : 554


நீதிமன்ற அவமதிப்பு என்ற வார்த்தையை கேட்டாலே நடுக்கம் ஏற்படும் காலம் மலையேறி விட்டது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிபவர், டாக்டர் செந்தில்குமார். இவர், 2025ம் ஆண்டு ஜூனில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடிக்கு மாற்றப்பட்டார்.  நான்கு மாதங்களுக்குள், அங்கிருந்து துாத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.

இதை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், பணியிட மாற்றத்துக்கு இடைக்கால தடை விதித்தது. அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. அத்துடன், செந்தில்குமாரை பணியில் சேர அனுமதிக்காததுடன், அவரது ஊதியத்தையும், அதிகாரிகள் விடுவிக்கவில்லை.இதையடுத்து செந்தில்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: கால்நடை பராமரிப்பு துறை செயலர், வழக்கில் முதல் எதிர்மனுதாரராக இருந்தபோதிலும், இந்த விவகாரத்தை அதிகாரிகள், மிகவும் அலட்சியமாக  கையாண்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரரை அந்த பணியிடத்தில் அமர்த்தாதது, அதிருப்தி அளிக்கிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், நீதிமன்றத்தின் கண்ணியம் அடங்கியுள்ளது; நீதிமன்றத்திற்கு உதவுவதே, தங்களின் கடமை என்பதை, அரசு வழக்கறிஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும். உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஒவ்வொரு நாளும், நீதிமன்றத்தின் கண்ணியம் குறைகிறது.

முன்பெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், மிக அரிதாகவே இருந்தன. 'நீதிமன்ற அவமதிப்பு' என்ற வார்த்தையை கேட்டாலே, நடுக்கம் ஏற்படும் காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது. இதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, உத்தரவை நடைமுறைப்படுத்துவது, அல்லது நடைமுறைப்படுத்தாததற்கு நம்பத்தகுந்த விளக்கத்தை அளிப்பது என, இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.

எனவே, கால்நடை பராமரிப்பு துறையின் தற்போதைய இயக்குனர் எச். கிருஷ்ண உன்னி, அவருக்கு முன் அந்தப் பதவியில் இருந்த எஸ்.பி. அம்ரித் ஆகியோர், நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.