இலங்கையில் தொடரும் சிறைச்சாலை பதற்றம் - யாழ்ப்பாணம், பதுளை சிறைகளில் பாதுகாப்பு தீவிரம்!
7 ஆவணி 2026 வெள்ளி 11:33 | பார்வைகள் : 601
இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அமைதியின்மை சம்பவங்களைத் தொடர்ந்து, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையைச் சுற்றிலும் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் பல சிறைச்சாலைகளிலும் ஏற்பட்டுள்ள தொடர் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் அவசர கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் 11 கைதிகள் காயமடைந்ததுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், இதில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை மருத்துவமனைக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், நீர்கொழும்பு – தளுபொத பகுதியில் அமைந்துள்ள பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை தொடர்கிறது. சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவு அருகே பெருமளவான கைதிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அப்பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மஹர சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட 10 கைதிகள் தற்போது பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்தில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஒரே காலப்பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள இந்த சம்பவங்கள் காரணமாக, சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் நிலைமை தொடர்பில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire