Paristamil Navigation Paristamil advert login

மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை கூடாது: தேனி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம்

மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை கூடாது: தேனி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம்

8 ஆவணி 2026 சனி 05:14 | பார்வைகள் : 585


தேனி மாவட்டம், மேகமலையில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். மேகமலை, வருஷநாடு உள்ளிட்ட, 98 மலைக்கிராம மக்களை வெளியேற்றக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் தலைமை வகித்து பேசியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஆக., 28க்குள் மலையில் உள்ள 5,000 குடும்பங்களை வெளியேற்ற வேண்டும். தமிழக அரசு ஒத்துழைக்காவிட்டால் துணை ராணுவத்தினரை பயன்படுத்த கூறி உள்ளனர். இத்தீர்ப்பில் நீதி இல்லை. வன உரிமை சட்டத்தின்படி மாவட்ட நிர்வாகம், அரசு நடவடிக்கை எடுக்காததால் இத்தீர்ப்பு வந்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்தாத மாவட்ட நிர்வாகம், பழங்குடியினர் நலத்துறை, வனத்துறையை நீதிபதிகள் கண்டித்திருக்க வேண்டும்.

பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி உள்ளனர். நீதிமன்றம் நியமித்த மத்திய அதிகார குழு, கிராமங்களில் ஆய்வு செய்யாமல், ஹோட்டலில் கூட்டம் நடத்தி சென்றுள்ளனர். மக்கள் வாழ்வதால் தான் வைகை ஆறு, வனம், விலங்குகள் பாதுகாக்கப்படுகிறது.

அதிகார வர்க்கத்தால் நதிகள் பாதுகாக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக, முதல்வர் விஜயை சந்தித்து மனு அளித்துள்ளோம். அமைச்சர் நிர்மல் குமார் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்; அதுவரை மக்களை அப்பறப்படுத்த மாட்டோம் எனக்கூறி உள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.