Paristamil Navigation Paristamil advert login

ராமேஸ்வரம் - தலைமன்னாரு இடையில் மீண்டும் ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து

ராமேஸ்வரம் - தலைமன்னாரு இடையில் மீண்டும் ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து

22 பங்குனி 2025 சனி 15:01 | பார்வைகள் : 12525


தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு, தனுஷ்கோடியிலிருந்து 1914-ஆம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

1964-ஆம் ஆண்டு டிசம்பரில் தனுஷ்கோடியை புயல் தாக்கிய பிறகு, 1965-ஆம் ஆண்டிலிருந்து ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. 

ஆனால், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் இந்த கப்பல் சேவை 1981-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 

இந்தியா - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, 14.10.2023-ல் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். 

அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ''ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு, ராமேஸ்வரம் கடற்பகுதியில் நான்கு இடங்களை தேர்வு செய்து தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஐஐடி நிபுணர்கள் குழு கடலடியில் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

அவற்றிலிருந்து ஒரு இடம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே தேர்வு செய்யப்பட்டு கப்பல் பயணிகள் இறங்குதளம் அமைய உள்ளது. 

இந்திய ரூபா 6.43 கோடி மதிப்பில் அமைய உள்ள இந்த இறங்குதளம் 119 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகமும், 6 அடி உயரமும் உடையது. 

இதன் முதற்கட்ட பணியாக நகர்வு மேடை அமைக்கும் பணி ராமேஸ்வரம்  ஓலைக்குடா கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது. 

இந்த நகர்வு மேடைக்கான பாகங்கள் இரண்டு வாரத்திற்குள் பொறுத்தப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை அருகே பயணிகள் இறங்குதளம் அமைய உள்ள பகுதியில் நிறுவப்படும். 

இதனை தொடர்ந்து கரையிலிருந்து கடலுக்குள் கொங்கிரீட் தூண்கள் அமைத்து கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3