சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: போலீஸ் கொலை பற்றி பேச விடாததால் ரகளை
29 பங்குனி 2025 சனி 05:39 | பார்வைகள் : 4152
உசிலம்பட்டியில் போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும், சபை காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சட்டசபையில் இருந்து, நேற்று ஒரு நாள் முழுதும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பழனிசாமி எழுந்து, ''உசிலம்பட்டியில் நடந்த போலீஸ்காரர் கொலை குறித்து பேச வேண்டும்,'' என்றார்.
அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:
சபாநாயகர் அப்பாவு: ஒரு சம்பவம் குறித்து பேச வேண்டும் என்றால், சபை துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன், அனுமதி பெற வேண்டும்.
பழனிசாமி: இது முக்கியமான நிகழ்வு. இப்போது பேசி விடுகிறேன்; பின்னர், முதல்வர் பதில் சொல்லட்டும்; எங்கள் ஆட்சியிலும் இதுபோல அனுமதிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர்: நேற்று நடந்த விவாதத்திற்கு, துணை முதல்வர் பதில் சொல்ல வேண்டும்; மூன்று மானியங்களில் அமைச்சர்கள் பேச வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: சபை துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே, அனுமதி கேட்டிருக்க வேண்டும்; திடீரென்று பேசக்கூடாது.
அமைச்சர் எ.வ.வேலு: முன்கூட்டியே அனுமதி பெற்று பேசி இருக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால், இதைத்தான் கூறினார். அந்த நடைமுறையைத்தான் நாங்களும் கடைப்பிடிக்கிறோம்; புதிதாக ஒன்றும் இல்லை.
துரைமுருகன்: எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிப்பது தவறான முன்னுதாரணம் ஆகி விடும்.
சபாநாயகர்: காலை 9:15 மணிக்கு எதிர்க்கட்சி கொறடா என்னை சந்தித்து, கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பிரச்னை குறித்து பேசப் போவதாக பொத்தாம் பொதுவாக சொன்னார்; அதற்கு இன்று அனுமதியில்லை.
இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து, 'எதிர்க்கட்சித் தலைவருக்கு மைக் கொடுங்கள்' என கோஷம் எழுப்பினர். அந்த நேரத்தில், துணை முதல்வர் உதயநிதி தன் பேச்சை துவக்கினார். இதனால், சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
சபாநாயகர் அப்பாவு, பழனிசாமியை பார்த்து, ''நீங்கள் முதல்வராக இருந்தவர்; பிரதான எதிர்க்கட்சித் தலைவர். நான் பல தடவை சொல்லி விட்டேன். சபையில் விதிப்படி தான் நடக்க வேண்டும். அறிவிப்பு கொடுக்காமல் பேச அனுமதிக்க முடியாது; உட்காருங்கள்,'' என்றார்.
அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்ததால், துணை முதல்வர் உதயநிதி பேச்சு கேட்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின்: சபாநாயகரிடம் முன் அனுமதி பெற்று பேச வேண்டும் என்பது மரபு. அதை, அமைச்சர் துரைமுருகன் சொல்லி விட்டார். விதிமுறையை கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் கேட்பதற்கு பதில் சொல்ல, நான் தயாராக இருக்கிறேன். 'டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டேன்' என்று சொல்ல மாட்டேன்.
சபாநாயகர்: எதிர்க்கட்சித் தலைவர் நினைத்தது எதையும் இங்கு செய்ய முடியாது. உங்கள் பிரச்னையை இங்கு கொண்டு வராதீர்கள். சபைக்கு ஒரு மரபு உள்ளது; அதன்படி தான் பேச வேண்டும். சபையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் செயல்படுவது நாகரிகம் இல்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே திட்டமிட்டு, குழப்பத்தை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளனர். எதிர்க்கட்சியினரை சபை காவலர்கள் வெளியேற்ற வேண்டும். நாள் முழுதும் சபை நடவடிக்கைகளில் இருந்து, அவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு சபாநாயகர் அறிவித்ததும், சபை காவலர்கள் உள்ளே வந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் சபையில் அமர்ந்திருந்தனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., என்ற முறையில், மானிய கோரிக்கை விவாதத்தில் அய்யப்பன் பேசினார். அப்போது அவர், ''உசிலம்பட்டியில் கொலை செய்யப்பட்ட காவலர் குடும்பத்திற்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்,'' என்றார்.
'மக்கள் பிரச்னையை பேசக்கூடாது என்பது சர்வாதிகாரம்'
''சட்டசபையில் முதல்வரின் மகன் பேசுவதால், மக்கள் பிரச்னை எதையும் பேசக்கூடாது என்கின்றனர். இது சர்வாதிகாரம்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டசபை வளாகத்தில் அவர் அளித்த பேட்டி:
பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், நாட்டு மக்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு வர, சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம்; நாட்டில் நடந்துள்ள பிரச்னைகளை பேசமுற்பட்டோம். அனுமதி மறுத்து எங்களை வெளியேற்றி விட்டனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில், போலீசாக பணிபுரிந்தவர் முத்துகுமார். இவரும், இவரது நண்பர் ராஜாராமனும், கஞ்சா வியாபாரிகளால் வெட்டப்பட்டுள்ளனர். இதில் முத்துகுமார் இறந்தார். ராஜாராமன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகம் முழுதும் கஞ்சா, போதைப்பொருள் விற்போர் சுதந்திரமாக விற்பனை செய்கின்றனர். இத்தகவலை போலீசாரிடம் தெரிவிப்போர் மீது தாக்குதல் நடத்திய நிலையில், போலீசாரை கொலை செய்யும் அளவுக்கு, போதைப்பொருள் வியாபாரிகள் துணிவு பெற்றுள்ளனர்.
கடந்த 25ம் தேதி, சிவகங்கையில் பயிற்சி மருத்துவரை, மர்ம நபர்கள் கடத்த முயன்றுள்ளனர். இதைக் கண்டித்து, பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சியில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து பேச அனுமதி கேட்டேன். எங்களை திட்டமிட்டு சபாநாயகர் வெளியேற்றினார். மக்களை பற்றி கவலைப்படாத அரசாக உள்ளது. முதல்வரின் மகன் பேசுவதால், எந்த பிரச்னையும் பேசக்கூடாது என்கின்றனர்; இது சர்வாதிகாரம்.
மக்களுக்காகத்தான் சட்டசபை என்பதை முதல்வரும், சபாநாயகரும் உணர வேண்டும். ஸ்டாலின் வீட்டு மக்கள் அதிகாரத்தில் இருப்பதால், எவ்வளவு முக்கிய பிரச்னையாக இருந்தாலும், சட்டசபையில் பேசக்கூடாது என்பது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க., அரசு செயலற்றதாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக, பொய்யான பிம்பத்தை உருவாக்கி, முதல்வர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளை மூட பா.ம.க., மற்றும் த.மா.கா., வலியுறுத்தல்
சென்னை:'காவலர் முத்துக்குமார் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள, பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர், 'தமிழகத்தில் மதுக்கடைகளை மூட, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர். அன்புமணி: மதுரை மாவட்டம், முத்தையன்பட்டி அரசு மதுக்கடையில், போலீஸ்காரர் முத்துக்குமார் மது அருந்திய போது, அருகில் மது குடித்துக் கொண்டிருந்த, அடையாளம் தெரியாத சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த எதிர் கும்பல், முத்துக்குமாரை பின் தொடர்ந்து சென்று, அரிவாளால் வெட்டி, கல்லால் அடித்து, படுகொலை செய்துள்ளனர்.மது, கஞ்சா ஆகிய இரண்டும், சமூகத்தை எந்த அளவுக்கு சீரழிக்கின்றன என்பதற்கு முத்துக்குமார் படுகொலை சான்று.தமிழகத்தில் நடக்கும் பெரும்பான்மையான குற்றங்களுக்கும், கொலைகளுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும், மது தான் காரணம் என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட, சட்டம் - - ஒழுங்கை பாதுகாக்க, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜி.கே.வாசன்: உசிலம்பட்டி அருகே போலீஸ் முத்துக்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாதது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது. டாஸ்மாக் மற்றும் போதை பொருட்கள் பழக்கத்தால், கொலைகள் நடப்பது தமிழகத்தில் வழக்கமாகி விட்டது. எனவே, தமிழக அரசு, இனியாவது விழித்துக் கொண்டு, டாஸ்மாக்கை மூடி, சட்டம் - ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.
காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டம்: முதல்வர்
''சில மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கி, காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பொது அமைதி நிலவுகிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏதுமின்றி, மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ்கின்றனர். இதனால்தான் தொழில் முதலீடு, புதிய
தொழிற்சாலைகள் என, தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது.
இதை தாங்கிக் கொள்ள முடியாத, சில மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும், கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கி, மக்களை பீதியில் வைக்க, காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
அதற்கு பிரதான எதிர்க்கட்சியும் துணை போகும் வகையில் துாபம் போடுகிறது. சில ஊடகங்களும், பத்திரிகைகளும் சேர்ந்து துணை போவது, இன்னும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடத் துடிக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் நடந்ததுபோல், எந்த கலவரமும் தி.மு.க., ஆட்சியில் இல்லை.
குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது; குற்றவாளிகள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது; கைது செய்யப்படுகின்றனர். பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுத்து, காவல் துறையும், தமிழக அரசும், மக்களை பாதுகாத்து வருகிறது. சில நேரங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை வைத்து, தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என,
மக்களை திசைதிருப்ப வீண் புரளிகளை கிளப்பக் கூடாது.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், அவர் கூட்டணி வைக்க துடித்துக் கொண்டிருக்கும் கட்சியாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய முன் வர வேண்டும். தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில், ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஆட்சியிலும் சரி, இப்போது எங்கள் ஆட்சியிலும், நடைபெறும் குற்றச் சம்பவங்களின் தரவுகளை வைத்துதான், காவல் துறையின் செயல்பாட்டை அளவிட முடியும்.
குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து, சட்டம் - ஒழுங்கு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாம். அரசின் மீது ஆக்கப்பூர்வமான குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசியல் செய்வதற்காக, தமிழக காவல் துறையின் பெயரையும், அமைதியான மாநிலம் தமிழகம் என்ற பெயரையும் கெடுப்பதற்கு துணை போகாதீர்கள்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
யேசையா ஞானப்பிரகாசம்
Dugny- France, கொழும்பு
வயது : 68
இறப்பு : 27 Aug 2026
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire