திமுகவா, தவெகவா குழப்பத்தில் காங்கிரஸ்!
15 தை 2026 வியாழன் 05:24 | பார்வைகள் : 1804
கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விஜய் தலைமையிலான தவெக போட்ட தூண்டிலில் சிக்கி, வரும் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா, தவெகவுடன் கூட்டணியா என்பதில் தொடர்ந்து காங்கிரஸ் குழப்பத்தில் இருந்து வருகிறது.
2019, 2021, 2024 பொதுத் தேர்தல்களில் நிலையாக இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி இப்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. ராகுல் காந்திக்கு நெருக்கமான கிரிஷ் ஷோடங்கர், பிரவீண் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த், கிள்ளியூர் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் சட்டப்பேரவைத் தேர்தல் வாய்ப்பை பயன்படுத்தி காங்கிரûஸ வலுப்படுத்த வேண்டும் என்று கருதுவதன் காரணம், திமுக அதிக இடங்களையும், ஆட்சியில் பங்கும் தர முன்வராவிட்டால், தவெகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களைப் பெற்று ஆட்சியில் பங்கேற்கலாம் என்பதுதான்.
திமுகவில் 40 தொகுதிகளையோ அல்லது தவெகவில் 75 தொகுதிகளையோ பெற்றுவிட்டால், இப்போது இருப்பதைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், குறைந்தது 10 சதவீத வாக்கு வங்கியை காங்கிரஸால் நிரூபிக்க முடியும். இதன்மூலம் 2029 - ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக அல்லது தவெகவிடம் பேரம் பேசி இப்போதுள்ள 10 எம்.பி.க்கள் எண்ணிக்கையை 20-ஆக உயர்த்தலாம் என்பது காங்கிரஸ் தலைமையின் கணக்கு.
அதேவேளை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், சு.திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விஷ்ணுபிரசாத் எம்பி. போன்றவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதே சிறந்தது, வெற்றிவாய்ப்பு அதிகம் என காங்கிரஸ் தலைமைக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இன்னொருபுறம், தவெகவை காட்டித் தங்களது பேர வலிமையைக் கூட்ட வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு அதிகரித்துள்ளது.
காங்கிரûஸப் பொருத்தவரை தமிழகத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 11 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே 50,000 வாக்குகளைப் பெற முடிந்தது. அப்போது அந்தத் தேர்தலில் 24 சதவீத வாக்குகளை மட்டுமே திமுக பெற்று அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. 2 தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது. ஆனால், மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து 2016 பேரவைத் தேர்தலில் 40 சதவீத வாக்கு வங்கியுடன் 98 இடங்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வென்றது.
கிறிஸ்தவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் சிறிய எண்ணிக்கை ஹிந்து ஜாதி வாக்குகளை தங்களால்தான் திமுக பெறுகிறது என காங்கிரஸார் வாதிடுகின்றனர்.
ஆனால், அந்தத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதிமுக - காங்கிரஸ் மோதிய இடங்களில் அதிமுக 33 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனக்கு வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளை காங்கிரஸுக்கு அளித்து சாமர்த்தியமாக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் திமுக போட்டியிட்டதால் தனது வெற்றியை வலுப்படுத்திக் கொண்டது என்பது காங்கிரஸின் மனக்குமுறல். திமுக தயவு இன்றி காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்கிற திமுகவின் வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொகுதிகளில் மக்கள் பிரச்னைகளை அவர்கள் கவனிப்பதில்லை, பெரும்பாலான காங்கிரஸார் சென்னையிலேயே தங்கிவிடுவதால் அவர்களை, தொகுதி மக்களால் அணுக முடியாத நிலை நிலவுகிறது. எனவே, காங்கிரஸ் தொகுதிகளை இந்த முறை மாற்றி வழங்க வேண்டும் என திமுகவினர் கருதுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் திமுக - காங்கிரஸ் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
திமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருந்தாலும், காங்கிரûஸ கைவிடும் நிலையில் திமுக தலைமை இல்லை. தொடர்ந்து தில்லியில் காங்கிரஸ் தலைமையுடன், திமுக தலைமை சமாதானம் பேசிவருகிறது.
காங்கிரஸின் மத்திய தலைமையில் இன்னொரு கருத்தும் நிலவுகிறது. என்னதான் திமுகவுடன் கூட்டணி அமைத்துத் தமிழகத்தில் வெற்றி பெற்றாலும், அமைய இருக்கும் ஆட்சி திமுக ஆட்சியாக இருக்குமே தவிர, காங்கிரஸ் ஆட்சியாகவோ, காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணி ஆட்சியாகவோ இருக்கப் போவதில்லை. அதே நேரத்தில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், கூடுதல் இடங்களில் போட்டியிடுவது மட்டுமல்லாமல் அதிக இடங்களிலும் வெற்றி பெற முடியும்.
தாங்கள் கேட்கும் தொகுதிகளை விட்டுத்தர தவெக தயாராக இருக்கும். திமுக வெற்றி பெறும் தொகுதிகளைத் தனக்குத் தக்க வைத்துக் கொள்ளுமே தவிர தங்களுக்கு விட்டுத் தராது என்று காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைவதைவிடக் கேரளத்தில் தங்கள் தலைமையில் ஆட்சி அமைவதை காங்கிரஸார் விரும்புவதில் வியப்பில்லை. இந்தத் துருப்புச் சீட்டை பயன்படுத்திதான் ராகுல் காந்தியின் மனதில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த சிந்தனையைக் காங்கிரஸார் விதைத்திருக்கிறார்கள். கிறிஸ்தவ அமைப்புகளின் மூலம் சோனியா காந்தியிடமும், "காங்கிரஸ் ஆட்சி' ஆசை காட்டி ராகுல் காந்தியிடமும் தவெகவுடனான கூட்டணிக்கு ஆதரவு தேட முற்பட்டிருக்கின்றனர்.
ராகுல் காந்தியின் ஆதரவையும், காங்கிரஸ் நீட்டத் தயாராக இருக்கும் நேசக் கரத்தையும் நடிகர் விஜய் ஏற்றுக்கொள்ளப் போகிறாரா, இல்லை நடிகர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி சீமான்போல தனித்துக் களமிறங்கி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா என்பது ஜனநாயகன் திரைப்படத்தைப் போலவே அரசியல் களத்தில் நிலவும் மில்லியன் டாலர் சந்தேகம்!
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire