மத்திய அரசின் 2026-2027 பட்ஜெட்டில் கவர்ச்சி இல்லை!
2 மாசி 2026 திங்கள் 11:45 | பார்வைகள் : 2476
உலகளவில் மிக சிக்கலான ஒரு சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். உயரும் உள்நாட்டு தேவைகள்; புவிசார் அரசியல் பதற்றங்கள்; அமெரிக்க வரிவிதிப்பு அபாயங்கள்; நாடுகளுக்கு இடையிலான போர்கள், நிதி சந்தைகளின் தள்ளாட்டங்கள் என திரும்பிய திசையெல்லாம் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வரும் சூழல். இப்படி ஒரு நிலையில், புதிய வளர்ச்சிக்கான ஒரு உந்துசக்தியை கண்டுபிடிப்பது என்பதுதான் மிகப் பெரிய சவால். அதை ஓரளவு சமாளிக்கும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருந்தாலும், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் பெரிதாக இடம்பெறவில்லை. அதுவும் அடுத்த சில மாதங்களில், தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அப்படிப்பட்ட அறிவிப்புகள் இல்லை. சர்வதேச நிலவரங்களை கருத்தில் கொண்டும், 2047ல் வளர்ந்த பாரதம் என்பதை இலக்காக வைத்தும் மட்டுமே வரும் 2026 - 27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டபடி பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்த உற்பத்தி துறை ஏமாற்றம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பங்குச் சந்தைகள் நேற்று சரிந்தன.
கடந்தாண்டு நவம்பரில் பீஹார் சட்ட சபைக்கு தேர்தல் நடந்தது. அதற்கு முன், பிப்ரவரியில் வெளியான மத்திய பட்ஜெட்டில் பீஹாருக்கு பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
ரூ.12 லட்சம்
இதை தவிர, சம்பள தாரர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும், வருமான வரி அடுக்குகள் குறைப்பு போன்ற அறிவிப்புகளும் வெளியாகின.
தற்போது, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி சட்டசபைகளுக்கு, அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழ்நிலையில், வரும் 2026 - 27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், பார்லி.,யில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, ஒன்பதாவது முறையாக பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதனால், இந்த பட்ஜெட்டில் பெரிய அளவில் மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், 90 நிமிடங்கள் நிர்மலா சீதாராமன் வாசித்த, 65 பக்க பட்ஜெட் உரையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் இல்லை. வருமான வரிச்சலுகைகள் இல்லாததால், சம்பளதாரர்களுக்கு இந்த பட்ஜெட் சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை.
நேரடி மற்றும் மறைமுக வரிகளில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் இல்லாததால், சாதாரண மக்கள் முதல் பல துறைகளை சேர்ந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எளிமை
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காத பங்குச் சந்தை, பட்ஜெட் தினம் என்பதால் நேற்று செயல்பட்டது. பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசிக்க வாசிக்க, பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ந்தன.
தற்போதுள்ள சர்வதேச சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, உற்பத்தி துறைமீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதனால், பட்ஜெட்டில் நல்ல செய்திக்காக காத்திருந்த உற்பத்தி துறையினருக்கு, எதிர்பார்த்த ஆதரவு கிடைக்க வில்லை.
உற்பத்தி துறை, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பை உருவாக்குதல், வருமான வரி முறையை எளிமையாக்கியது, சுங்க வரிகளில் மாற்றம் உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகள், வளர்ச்சிக்கான எக்ஸ்பிரஸ்,'' என தன் உரையில் நிர்மலா சீதாராமன் கூறிஉள்ளார்.
உற்பத்தியை அதிகரித்தல் - போட்டியிடும் திறனை வளர்த்தல்; மக்களின் திறன்களை மேம்படுத்துதல்; அனைவரின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து என்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்று மூன்று, 'கர்தவ்யா' எனப்படும் 'கடமை'களின் அடிப்படையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சர்வதேச அரசியல்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழ்நிலைகள், போர்கள், மாறிவரும் சர்வதேச அரசியல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாறி வரும் சர்வதேச சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில், நம் நாட்டை தயார் செய்யும் நோக்கத்துடனும், 2047ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை எட்டும் நோக்கத்துடனான நடவடிக்கைகள், அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக நிதித்துறை
நிபுணர்கள் கூறுகின்றனர்.
விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருந்தாலும், நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும், சர்வதேச போட்டிகளை எதிர்கொள்வதே முக்கியம் என்பதாலும், பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் இடும் வகையில், மின்னணு பாகங்கள் தயாரிக்க, 40 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை திட்டம், தற்போது உலகெங்கும் பேசப்படும் அரிய வகை கனிமங்களுக்காக புதிய தொழில் வழித்தடம், கன்டெய்னர்கள் தயாரிப்பை ஊக்குவித்தல் போன்ற அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
திறன் சார்ந்த இளைஞர்களை உருவாக்கும் திட்டம், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தங்களுடைய தரவு அமைப்புகளை உருவாக்க 2047ம் ஆண்டு வரை வரிச்சலுகை போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
உள்கட்டமைப்புக்கான நிதி, நடப்பு நிதியாண்டில், 11.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 12.20 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மிகவும் முக்கியமாக, விலைவாசி உயர்வை கட்டுப்பதுத்தும் வகையில், நிதி பற்றாக்குறை, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.30 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். தற்போது இது, 4.40 சதவீதமாக உள்ளது.
மொத்தத்தில் இது கவர்ச்சி இல்லாத, பெரிய அளவில் விளம்பரப்படுத்தாமல், எதிர்காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார பட்ஜெட்.
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire