இலங்கையில் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு
11 மாசி 2026 புதன் 15:16 | பார்வைகள் : 2160
கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தொலைந்து போகும் அல்லது திருடப்படும் கையடக்கத் தொலைபேசிகளை ஒரு சில குழுவினர் குற்றச்செயல்களுக்கும், சட்டவிரோதச் செயல்களுக்கும் பயன்படுத்துவது விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்:
பொதுமக்கள் தமது கையடக்கத் தொலைபேசி காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, அது மற்றொரு தரப்பினரின் கைக்குச் செல்லும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக உங்களது நிதித் தகவல்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
தொலைபேசி காணாமல் போனவுடன் சம்பந்தப்பட்ட சேவை வழங்குநரை தொடர்பு கொண்டு சிம் அட்டையை முடக்குவது அவசியம். இதன் மூலம் மூன்றாம் தரப்பினர் அதனைத் தவறான செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ய வேண்டும். முறைப்பாடு செய்யும் போது தொலைபேசியின் "சர்வதேச மொபைல் சாதன அடையாள இலக்கம் ( IMEI )இலக்கத்தைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
எனவே, தொலைபேசி காணாமல் போவதற்கு முன்னரே இந்த விபரங்களைச் குறித்து வைத்துக்கொள்ளுமாறு அவசியம். மேலும், பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.ineed.police.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்வதன் மூலம் தொலைபேசியைக் கண்டறியப் பொலிஸார் முன்னுரிமை வழங்குவர்கள்.
அந்தவகையில் கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2,019 தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன.
அதேபோல், 2024 ஆம் ஆண்டு 2,796 தொலைபேசிகள் காணாமல் போயிருந்ததுடன், 928 தொலைபேசிகள் திருடப்பட்டிருந்தன. இவ்வாறு தொலைந்து போகும் அல்லது திருடப்படும் கையடக்கத் தொலைபேசிகளை ஒரு சில குழுவினர் குற்றச்செயல்களுக்கும், சமூக விரோத மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்கும் பயன்படுத்துவது விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
தமக்குச் சொந்தமில்லாத ஒரு பொருளை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். பிறிதொருவரின் பொருளை பயன்படுத்துபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேபோல், திருடப்பட்ட பொருள் என்று தெரிந்தே அதனை குறைந்த விலைக்கு வாங்குபவர்கள் அல்லது வைத்திருப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, புதிய அல்லது பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகளை வாங்கும் போது அவை திருடப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என்றார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire