தி.மு.க., கூட்டணியில் நீடிப்பது குறித்து காங்., பொறுப்பாளர் 18ல் ஆலோசனை!
13 மாசி 2026 வெள்ளி 05:15 | பார்வைகள் : 2090
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது என முதல்வர் ஸ்டாலின் கைவிரித்து விட்ட நிலையில், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பது குறித்து, தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுடன், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், வரும் 18ம் தேதி ஆலோசிக்க உள்ளார்.
அதேபோல, அ.தி.மு.க., தலைமையும் கூட்டணி பேச்சை முடித்து, ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24ல் தொகுதி உடன்பாட்டை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்டு, காங்கிரஸ் பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆனால், ஆட்சியில் பங்கு தர முடியாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி விட்டார்.
அதை விமர்சித்து, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். முதல்வருடன் நேரடியாக மல்லுக்கட்டும் மாணிக்கம் தாகூர் மீது, தி.மு.க., மூத்த அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும் கோபம் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர் ஒருவர், தன் தந்தையுடன் மூத்த அமைச்சர் ஒருவரை சந்தித்து வாழ்த்து பெறச் சென்றார். காங்கிரஸ் கட்சியின் போக்கு பிடிக்காததால், அந்த மாவட்டத் தலைவரிடமும், அவரது தந்தையிடமும் மூத்த அமைச்சர் முகம் கொடுத்து பேசவில்லை.
அந்தளவுக்கு தி.மு.க., - காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி மேலோங்கி நிற்கிறது. அதை வெளிப்படுத்தும் வகையில், மதுரையில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில், 'காங்கிரஸ் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்; கூட்டணியை நம்பி அரசியல் நடத்த முடியாது' என காட்டமாக பேசியுள்ளார். அவரது அதிரடி பேச்சுக்கு, சமூக வலைதளங்களில் காங்கிரசார் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், 'கூட்டணி ஆட்சி தேவையில்லை' என்று அறிவிக்கும்படி, தி.மு.க., மேலிடத்திலிருந்து, அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தனிப்பெரும்பான்மை பெற்று தி.மு.க., ஆட்சி அமைக்கும் போது, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது,'' என்றார்.
அவரை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆட்சியில் பங்கு கோரிக்கை அவசியமில்லை,'' என்றார்.
அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், ''ஸ்டாலின், ராகுல் இடையே பாச உறவு பின்னிப் பிணைந்துள்ளது. இதை யாரும் அவ்வளவு எளிதில் சிதைக்க முடியாது. சிதைக்க முயற்சி செய்கின்றனர்; அது நடக்காது,'' என்றார்.
இந்நிலையில், தி.மு.க., கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க, வரும் 18ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுடன், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஆலோசனை நடத்த உள்ளார். அதில், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து, ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவை அறிவிக்க ஷோடங்கர் திட்டமிட்டுள்ளார்.
தொகுதி உடன்பாடு
இதற்கிடையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தரப்பில், இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணியை இறுதி செய்து, வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் தொகுதி பங்கீட்டை அறிவிக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க.,வுடனும் தே.மு.தி.க., பேசி வருவதால் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பணிகளை வேகப்படுத்த விரும்பும் பழனிசாமி, தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன், மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் வருகிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்து, 24ம் தேதியன்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை அறிவிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire