Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் மதியம் 1 மணி நிலவரம்: கேரளாவில் 58.89, புதுச்சேரி 55.49, அசாமில் 58.26% ஓட்டுப்பதிவு

தேர்தல் மதியம் 1 மணி நிலவரம்: கேரளாவில் 58.89, புதுச்சேரி 55.49, அசாமில் 58.26% ஓட்டுப்பதிவு

9 சித்திரை 2026 வியாழன் 11:24 | பார்வைகள் : 1656


அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (ஏப்ரல் 09) காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி, கேரளாவில் 58.89, புதுச்சேரியில் 55.49%, அசாமில் 58.26% ஓட்டுப்பதிவாகி இருக்கிறது.

புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் இன்று (ஏப்ரல் 09) நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் செய்துள்ளனர். 3 மாநிலங்களிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

கேரளாவில் முதல்முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

3 மாநில கள நிலவரம் குறித்து ஓர் சிறப்பு அலசல்!

புதுச்சேரி யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மொத்தம், 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி, தி.மு.க., - காங்., கூட்டணி, நடிகர் விஜயின் த.வெ.க., மற்றும் சீமானின் நா.த.க., இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. 9.50 லட்சம் வாக்காளர்கள் தகுதி உடையவர்கள். இவர்களில், 5 லட்சம் பேர் பெண்கள்; 4.46 லட்சம் பேர் ஆண்கள். 30 தொகுதிகளில், 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மதியம் 1 மணி நிலவரப்படி 55.49 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.

கேரளாவில், மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின், 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1.32 கோடி பேர் ஆண்கள். 1.39 கோடி பேர் பெண்கள். 32,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வரிசையில் நின்று மக்கள் தங்களது ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர். 140 தொகுதிகளில், 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மதியம் 1 மணி நிலவரப்படி 58.89 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில், 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்தம், 2.50 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1.25 கோடி பேர் ஆண்கள்; 1.25 கோடி பேர் பெண்கள்; 318 பேர் மூன்றாம் பாலினத்தவர். ஓட்டுப்பதிவுக்காக, 31,490 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 126 தொகுதிகளில், 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மதியம் 1 மணி நிலவரப்படி 58.26 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

3 மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 2026 சட்டசபை தேர்தல்களில் கேரள மக்கள் பெருமளவில் ஓட்டளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். முன்னெப்போதும் இல்லாத வகையில் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து பெருமளவில் வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஓட்டளிப்பதில், கேரள மக்கள் மிகப்பெரிய அளவில் பங்கேற்பதை உறுதிசெய்யுமாறு நான் அறைகூவல் விடுக்கிறேன். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் பெருமளவில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு நான் வலியுறுத்துகிறேன். குறிப்பாக, ஜனநாயகச் செயல்முறையை வலுப்படுத்த நமது இளைஞர்களுக்கும் பெண் வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது. அசாம் மக்கள் பெருமளவில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மாநிலத்தின் இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் உற்சாகத்துடன் பங்கேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : -

இறப்பு : 17 Aug 2026