தமிழக மக்களுடன் பழகிய 54 மாதம் ஒரு பொற்காலம்; கவர்னர் ரவி உருக்கம்
11 பங்குனி 2026 புதன் 13:26 | பார்வைகள் : 1888
தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக கவர்னர் ஆர்என். ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழில் அவர் வெளியிட்ட அறிக்கை;
கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். வாழ்க்கையின் ஓட்டத்தில், இப்போது உங்களை விட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும் உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள். என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த 54 மாதங்களில், உங்களோடும் உங்கள் வழியாக இந்தப் பெருமக்களோடும் வாழ்ந்தேன். மகிழ்ந்தேன், செம்மாந்த நெறிகளில் திளைத்தேன், அன்பின் அரவணைப்பில் ஆழ்ந்து கலந்தேன். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மரபிலும் நவீனத்திலும் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டுக்கு ஆளுநராகப் பொறுப்பேற்று வந்த போது. கோவிட் பெருந்தொற்றின் பாதிப்புகள் முழுமையாகத் தீர்ந்திருக்கவில்லை. இருப்பினும், நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னைப் பெரிதும் சுவர்ந்தன. யாரைச் சந்தித்தாலும் எங்கே போனாலும், புன்னகைகள்தாம் என்னைச் சூழ்ந்தன.
கல்வி சிறந்த தமிழ்நாடு. புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்னும் மகாகவியின் வரிகளின் மகத்துவத்தை முழுமையாக உணர முடிந்தது. வெறும் ஏட்டுக் கல்வியாக இல்லாமல், கல்வியின் துல்லியத்தையும் ஞானத்தையும் நீங்கள் உணர்ந்துள்ளீர்கள், தக்க நிலையில் வெளிப்படுத்தவும் செய்கிறீர்கள்.
உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு - உங்களின் அயராத உழைப்பு, உழைப்பின் களிப்பு. தலைநகரம் சென்னை முதல் நெல்லையிலும் கன்னியாகுமரியிலும் உள்ள கடைக்கோடி கிராமங்கள், கிழக்குக் கடற்கரை முதல் மேற்கு மலைச் சாரல் என்று பற்பல ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் சென்றேன்.
ஊர்களின் அமைப்பு, அளவு, வட்டார வழக்குகள் போன்றவை மாறுபட்டாலும், உங்கள் அனைவரின் அன்பும், உழைப்பும். உழைப்பில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் மாறவேயில்லை.
மாணவர்களிடம் இருக்கிற துள்ளலையும் சிரிப்பையும் வயது முதிர்ந்தவர்களிடமும் கண்டேன்; உயர் தொழில்நுட்ப விவாதங்களில் காண்கிற நுணுக்கங்களை, உழவாரப் பணியிலும் பார்த்தேன் நான் சென்ற இடங்களிலும் கண்ட காட்சிகளிலும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு மெய்யாக மிளிர்ந்திருந்தது.
தமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும், நவீனத்துவத்தின் மேன்மையை முறையாக உணர்ந்திருக்கிறார்கள். நவீன கால தொழில்நுட்ப மேம்பாடுகளை அழகாகப் பயன்படுத்துகிறார்கள். செயற்கை நுண்ணறிவை இயற்கையான செறிவோடு கையாளுகிறார்கள். பல்கலைக்கழகங்களுக்கும் சுல்வி நிறுவனங்களுக்கும் சென்ற போது இதைக் கண்டேன்
அன்புச் சகோதர சகோதரிகளே, சொல்லச் சொல்ல விரியும் என்பதாக என்னுடைய அனுபவங்களும் ஆனந்தமும் விரிந்து கொண்டேபோகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை நீங்கள் காட்டிய அன்பு.
இவ்வாறு தமது அறிக்கையில் ஆர்.என். ரவி குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire