Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் புதிய ஆளுனர் நாயகம்

கனடாவின் புதிய ஆளுனர் நாயகம்

6 வைகாசி 2026 புதன் 14:14 | பார்வைகள் : 1874


கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற சட்ட நிபுணர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் மார்க் கார்னி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

உலகளாவிய அரசியல் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் கார்னி, "சட்டத்தின் ஆட்சி மற்றும் ஆழ்ந்த அறிவுத்திறன் கொண்ட ஒருவரே இப்பதவிக்குத் தகுதியானவர்.

அந்த வகையில் தனது வாழ்நாள் முழுவதையும் அந்த கொள்கைகளுக்காக அர்ப்பணித்த லூயிஸ் ஆர்பரை நியமிக்குமாறு நான் மன்னரிடம் பரிந்துரை செய்துள்ளேன்," என்று தெரிவித்தார்.

பிரதமர் கார்னியின் இந்தப் பரிந்துரைக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒப்புதல் அளித்துள்ளார். புதிய ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள லூயிஸ் ஆர்பர், கனடிய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகப் பணியாற்றியவர்.

ஐநா மனித உரிமைகள் ஆணையராகவும், ருவாண்டா மற்றும் முன்னாள் யுகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயங்களின் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றி சர்வதேச அளவில் தடம் பதித்தவர்.

2021-ஆம் ஆண்டில் கனடிய ராணுவத்தில் நிலவிய பாலியல் அநார்த்தங்கள் குறித்த சுதந்திரமான விசாரணையை வழிநடத்தி, 48 முக்கிய பரிந்துரைகளை வழங்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

கனடாவின் உயரிய குடிமை விருதான 'ஆர்டர் ஆஃப் கனடா' (Order of Canada) மற்றும் 42 கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வரும் ஜூலை மாதம் பதவிக்காலம் முடிவடையும் தற்போதைய ஆளுநர் நாயகம் மேரி சைமனுக்குப் பிறகு பொறுப்பேற்பார்.

கனடாவின் முதல் பூர்வகுடி ஆளுநர் நாயகம் என்ற வரலாற்றைப் படைத்த மேரி சைமனின் சேவையை பிரதமர் கார்னி இதன்போது வெகுவாகப் பாராட்டினார். மேரி சைமன் பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்காகவும், மொழிக்காகவும் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது என்று அவர் குறிப்பிட்டார்.

மேரி சைமன் ஆங்கிலம் மற்றும் இனுக்கடிடுட் (Inuktitut) மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர் என்றாலும், பிரெஞ்சு மொழியில் அவருக்கு இருந்த சிரமம் விவாதமாக இருந்து வந்தது.

அதற்கு மாறாக, மாண்ட்ரியலில் பிறந்த லூயிஸ் ஆர்பர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3