ஹோர்முஸ் நீரிணை திறக்க வேண்டும் - ஈரான் வெளிவிவகார அமைச்சரிடம் சீனா வலியுறுத்தல்!
6 வைகாசி 2026 புதன் 18:17 | பார்வைகள் : 1996
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்குப் பின்னர் முதன்முறையாகச் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்துப் பேசிய சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியப் பாதையாக விளங்கும் 'ஹோர்முஸ் நீரிணையை' உடனடியாகத் திறக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
புதன்கிழமை ( 06) பீஜிங்கில் நடைபெற்ற இருதரப்பு அவசரப் பேச்சுவார்த்தையின் போதே இந்த விவகாரம் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கச் சீனா உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, "மத்திய கிழக்கில் நிலையானதொரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதே தற்போதைய அவசர முன்னுரிமையாகும். மீண்டும் மோதல்கள் வெடிப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் விதித்துள்ள தடைகள் மற்றும் கடற்படை முற்றுகைகள் காரணமாக, உலகின் பெரும்பாலான மசகு எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணை தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ,
"ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான மற்றும் இயல்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதில் சர்வதேச சமூகம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. எனவே, சர்வதேச சமூகத்தின் இந்த வலுவான கோரிக்கைக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் (ஈரான் மற்றும் அமெரிக்கா) உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் எனச் சீனா நம்புகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
சீனா தனது மசகு எண்ணெய் தேவையில் சுமார் 12 சதவீதத்தை (தினமும் 1.38 மில்லியன் பேரல்கள்) ஈரானிடமிருந்தே இறக்குமதி செய்கிறது என்பதால், இந்த நீரிணை மூடப்பட்டிருப்பது சீனப் பொருளாதாரத்திற்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற தங்களின் கொள்கைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்குச் சீனா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகச் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, சீனாவுடனான ஈரானின் உறவு எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என ஈரான் அமைச்சர் அராக்சி உறுதியளித்துள்ளார்.
அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே பீஜிங்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
இதில் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் ஈரான் போர் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆராயவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான் அமைச்சருடன் சீனா நடத்தியுள்ள இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire