அரசின் அதிகாரம் மத சுதந்திரத்தை விழுங்கி விடக்கூடாது: உச்சநீதிமன்றம் கருத்து
23 சித்திரை 2026 வியாழன் 06:22 | பார்வைகள் : 1738
மத நடைமுறைகளில் அத்தியாவசியம் எது என்பதை உறுதியாக வரையறுப்பது நீதித்துறைக்கு மிகவும் கடினமான, சாத்தியமற்ற ஒரு செயல். அரசின் அதிகாரம் மத சுதந்திரத்தை விழுங்கிவிடக் கூடாது' என, சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரும் வழக்கை தொடர்ந்து, மத உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் தொடர்பான ஏழு முக்கிய சட்டக் கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் ஏழாவது நாளாக இன்று நடந்த விசாரணையின் போது, மதம் மற்றும் சமூக சீர்திருத்தம் தொடர்பான கருத்துகளை வழக்கறிஞர்கள் அடுக்கடுக்காக முன்வைத்தனர்.
குறிப்பாக மத சுதந்திரத்தின் அடிப்படை அம்சங்கள் குறித்து வாதிட்ட, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம்,
மதச் சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையல்ல; அது ஒரு தனிமனிதனின் மனசாட்சி சார்ந்த அடிப்படை உரிமை. ஒரு தனிநபரின் தத்துவத் தேடலும், அவர் இறைவனின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழமும் மாறாதவை.
சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மதச் சுதந்திரத்தை மெல்ல மெல்ல அழித்துவிடக் கூடாது. ஒரு சட்டம் மத விவகாரங்களில் தலையிடும்போது, அது மிகக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,ஒரு மதத்தில் அத்தியாவசிய நடைமுறைகள் என்றால் என்ன? மதத்தின் உள் விவகாரங்களில் அரசு தலையிட முடியுமா?' என, கேள்வி எழுப்பினர்.
அப்போது நீதிபதி பி.வி.நாகரத்னா முக்கியமான கருத்தை முன்வைத்தார். ''எது அத்தியாவசியமான நடைமுறை என்பதை தீர்மானிக்க நீதிமன்றத்தால் முடியாது,'' என தெரிவித்தார்.இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர்கள்,
'சட்டவிதிகள் மதத்தின் உண்மையான கூறுகளைக் கண்டறிய உதவியாக இருக்கலாமே தவிர, அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடாது' என, வாதிட்டனர்.நீதிபதி ஜாய்மால்யா பக்சி, மற்றொரு சட்ட சிக்கலை முன்வைத்தார். அப்போது அவர், ''அரசியலமைப்பு சட்டப் பிரிவு 25(2)(பி) பிரிவின் கீழ் சமூக சீர்திருத்தத்திற்காக மட்டுமே அரசு மத விவகாரங்களில் சட்டங்களை கொண்டு வரமுடியும். அப்படியென்றால், அரசின் அடிப்படை கடமைகளை சமூக சீர்திருத்தம் என எடுத்துக் கொள்ள முடியுமா?,'' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம்,''அரசியலமைப்பு சட்டப் பிரிவு 25(2)(பி) என்பது ஜாதி ரீதியான பாகுபாட்டை ஒழிக்க உருவாக்கப்பட்டது. பாலின விவகாரங்களுக்கு அச்சட்டம் பொருந்தாது. ஒரு குறிப்பிட்ட தெய்வம் நைஷ்டிக பிரம்மச்சாரி கோலத்தில் இருப்பதாக பக்தர்கள் நம்பினால், அந்த நம்பிக்கையின் பின்னணியில் வலுவான தர்க்கம் உள்ளது. அதில் சமத்துவத்தை தேடி நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது,'' என்றார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ''சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் நீண்டகால ஆதிக்கங்களுக்கு இடையிலும் இந்திய நாகரிகம் இன்றும் நிலைத்திருப்பதற்குப் பக்தி இயக்கங்களும், மகான்களுமே காரணம். இதனை அங்கீகரித்தே அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் மதப் பிரிவினருக்குத் தனித்துவமான உரிமைகளை வழங்கினர். மதம் என்பது அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டதல்ல,'' என, வரலாற்றுப் பின்னணியுடன் விளக்கினார்.
இறுதியாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''அறநெறி என்பது ஒவ்வொரு மதத்திற்கும் மாறுபடும். திகம்பர துறவிகள் ஆடையின்றி இருப்பதையோ, சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதையோ அந்தந்த மதங்களின் தார்மீகக் கோட்பாடாகச் சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பொதுவான அறநெறியை அரசு தீர்மானிக்க முடியாது,'' என்றார்.
இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:
சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு எப்போது தலையிடலாம் என்பதற்குப் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்குவது கடினம். இது ஒவ்வொரு வழக்கின் தன்மையைப் பொறுத்தது. அரசு என்பது மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் அமைப்பு என்பதால், தீமைகளை ஒழிக்க அதற்கு அதிகாரம் உண்டு. ஆனால், அந்த அதிகாரம் மதச் சுதந்திரத்தை விழுங்கிவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire