ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொடிய 'எபோலா' வைரஸ்
27 வைகாசி 2026 புதன் 07:37 | பார்வைகள் : 1432
ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொடிய 'எபோலா' வைரஸ் பரவலைக் கருத்திற் கொண்டு, மூன்று ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு கனடா அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
அதன்படி, கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் குடியிருப்பாளர்கள் கனடாவிற்குள் நுழைவதற்கு புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் கனடாவிற்குள் நுழைவதையும், அது பரவுவதையும் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா அரசாங்கம் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 'புந்திபுகியோ' எனப்படும் எபோலா வைரஸின் புதிய வகை தீவிரமடைந்து, அது தேசிய அளவிலான பாதிப்பாக மாறுவதற்கான அபாயம் "மிகவும் அதிகமாக" உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தது.
அத்துடன், கொங்கோ மற்றும் உகாண்டாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பரவலை 'சர்வதேச அக்கறைக்குரிய அவசரநிலை' எனவும் பிரகடனப்படுத்தியுள்ளது.
கனடாவின் இந்தத் தடை உத்தரவுக்கு முன்னதாகவே, கடந்த வாரம் அமெரிக்க அரசாங்கம் இதே போன்றதொரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
அதன்படி, அண்மைய வாரங்களில் கொங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்த அமெரிக்கப் பிரஜை அல்லாத ஏனைய வெளிநாட்டவர்கள் எவரும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கனடாவின் பொதுச் சுகாதார அமைப்பின் செய்தி அறிக்கை பிரகாரம், பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கப் பிராந்தியங்களில் அண்மைய வாரங்களில் தங்கியிருந்த கனேடியப் பிரஜைகள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரஜைகள் எபோலா அறிகுறிகள் எதனையும் கொண்டிருக்காத பட்சத்திலும், அவர்கள் மே 30 ஆம் திகதி முதல் 21 நாட்களுக்குக் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கரீபியன் நாடான பஹாமாஸும் இந்த மூன்று ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு முழுமையான தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அந்நாட்டு அரசாங்கம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிவிப்பில் தடையை விதிக்கவில்லை.
மாறாக, பஹாமாஸ் வந்தடைவதற்கு முன்னரான 30 நாட்களுக்குள் கொங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் தீவிர சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்படும் எனவும், தேவையேற்படின் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.
தற்போது வரை அமெரிக்கா, கனடா மற்றும் பஹாமாஸ் ஆகிய நாடுகளில் எபோலா தொற்றுப் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire