கென்யாவில் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு எதிராகப் போராட்டம்
2 ஆனி 2026 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 1480
கென்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நன்யுகி நகரில் உள்ள அமெரிக்க இராணுவ வான்படைத் தளத்திற்கு அருகில், எபோலா தனிமைப்படுத்தல் மையம் ஒன்றை அமைப்பதற்கான அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது கொங்கோவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எபோலா வைரஸ் பரவலால் பாதிக்கப்படும் அமெரிக்கப் பிரஜைகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காகவே, கென்யாவின் 'லைகிபியா' வான்படைத் தளத்தில் 50 படுக்கைகளைக் கொண்ட இந்த அவசரத் தனிமைப்படுத்தல் மையத்தை அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் திட்டத்தினால் தங்களது நாட்டிற்கும் எபோலா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திங்கட்கிழமை வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் டயர்களைக் கொளுத்தியும், வீதிகளை மறித்தும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர். அவர்களைக் கலைப்பதற்காகப் பொலிஸார் கடுமையான கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர், போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்துத் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என உள்ளூர் சமூகத் தலைவர் பட்ரிக் வஹோம் தெரிவித்துள்ளார்.
மற்றைய நபர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இராணுவத்தினரால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரின் உடல்களிலும் நெஞ்சு மற்றும் தோள்பட்டைப் பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் காணப்படுவதாக பிபிசி செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த உயிரிழப்புகள் குறித்துப் பொலிஸ் தரப்போ அல்லது அரசாங்க அதிகாரிகளோ இதுவரை உத்தியோகபூர்வ கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.
இதுவரை கென்யாவில் எபோலா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில், இந்த அமெரிக்க மையம் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு "கடுமையான மற்றும் உடனடி ஆபத்தை" ஏற்படுத்தும் எனக் கூறி மனித உரிமை அமைப்பு ஒன்று அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இந்த மையத்தின் திறப்பு விழாவிற்கு இடைக்காலத் தடை விதித்த உயர் நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமையும் அந்தத் தடையை நீடித்து உத்தரவிட்டுள்ளதுடன், இத்திட்டம் தொடர்பான முழு விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திற்குப் பணித்துள்ளது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவையும் மீறி அமெரிக்க இராணுவ விமானங்கள் அந்தத் தளத்தில் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மறுபுறம், இத்திட்டம் குறித்து முதல்முறையாகப் பகிரங்கமாகப் பேசியுள்ள கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அமெரிக்காவின் இந்தத் திட்டத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்,
"அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் லைகிபியா வான்படைத் தளத்தில் இந்த மையத்தை அமைப்பதற்கு கென்யாவின் ஆதரவைக் கோரிய போது நான் அதற்கு அனுமதி அளித்தேன். ஏனென்றால், அவர்கள் கடந்த 30, 40 வருடங்களாகக் கென்யாவுடன் பயணிக்கும் எங்களது நட்பு நாடாகும். எபோலா போன்ற ஒரு மிக தீவிரமான சுகாதார விவகாரத்தை அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக அரசியல்மயப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
எனினும், கென்யாவின் வைத்தியர்கள் சங்கம் மற்றும் அரசாங்கக் கண்காணிப்புக் குழுக்கள் இந்தத் திட்டத்திற்கு தங்களது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire