வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை- 12 பொலிஸார் காயம், 16 பேர் கைது
11 ஆனி 2026 வியாழன் 19:25 | பார்வைகள் : 1863
வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு இரண்டாவது நாளாகவும் கடுமையான இனவாத வன்முறைகளும் கலவரங்களும் வெடித்துள்ளன.
நேற்றிரவு நடந்த இந்த மோதல்களில் 12 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், 16 கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வட அயர்லாந்துக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் ஹிலாரி பென் தெரிவித்துள்ளார்.
பெல்பாஸ்டிற்கு சற்று வெளியேயுள்ள ‘கிளென்கோர்ம்லி’ பகுதியில் உள்ள ஒரு வீதியில் திரண்டிருந்த வன்முறையாளர்கள் பொலிஸார் மீது கல், போத்தல்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளை வீசித் தாக்கியதுடன், குப்பைத் தொட்டிகள் மற்றும் திணைக்கள வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். இதனால் கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்த நேரிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு வட பெல்பாஸ்டில் ஸ்டீபன் ஓகில்வி என்ற 40 வயதுடைய நபர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலே இந்த வன்முறைகளுக்குக் காரணமாகும். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஓகில்வி தனது இடது கண்ணை இழந்துள்ளதுடன், கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சூடானைச் சேர்ந்த 30 வயதான ஹாதி அலோதித் என்ற புகலிடக்கோரிக்கையாளர் கைது செய்யப்பட்டு, அவர் மீது பெல்பாஸ்ட் நீதிமன்றத்தில் கொலை முயற்சி மற்றும் என்.எச்.எஸ் சுகாதார ஊழியரை அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு சாதாரண எதிர்ப்புப் போராட்டம் அல்ல, திட்டமிட்ட இனவாதத் தாக்குதல் என ஸ்கை நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் ஹிலாரி பென் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "மக்களின் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களை நீங்கள் இலக்கு வைத்தால், அதை ‘இனவாதக் காடைத்தனம்’ என்றுதான் விவரிக்க முடியும். மக்கள் வேலைக்குச் செல்லும் வழியில் அவர்களது வாகனங்களை மறித்து, அவர்களின் தேசிய இனம் எதுவென்று முகமூடி அணிந்த கும்பல் விசாரிப்பதாக முறைப்பாடுகளி வந்துள்ளன. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது." எனத் தெரிவித்துள்ளார்.
வன்முறையாளர்கள் வெளிநாட்டு மற்றும் மாற்று இனப் பின்னணியைக் கொண்ட சுகாதார ஊழியர்களையும் இலக்கு வைத்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
மாற்றுத் தோல் நிறத்தைக் கொண்ட பெண் தாதியர் ஒருவரை முகமூடி அணிந்த நான்கு ஆண்கள் வைத்தியசாலை வரை துரத்திச் சென்றுள்ளனர். எனினும், அவர் தைரியமாகத் தனது கடமைக்குச் சென்றுள்ளார்.
'வைட்அபே' வைத்தியசாலையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அங்குள்ள சில வெளிநோயாளிப் பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கலவரங்கள் குறித்துக் கடுமையான அதிர்ச்சியை வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஓகில்வியின் குடும்பத்தினர், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், "எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்தத் துயரமான சம்பவத்தை, சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ யாரும் பயன்படுத்த வேண்டாம். எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த மக்கள் ஆற்றும் பங்களிப்பு மகத்தானது. எங்களது அன்புக்குரியவரின் பெயரால் இந்த வன்முறைகளைச் செய்ய வேண்டாம்." என குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தற்போது நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்காட்லாந்தில் இருந்து விசேட அதிரடிப் பொலிஸ் குழுக்கள் மற்றும் மோப்ப நாய்கள் வட அயர்லாந்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகப் பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire