Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து - 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து - 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

15 ஆனி 2026 திங்கள் 12:35 | பார்வைகள் : 1425


அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) பாராசூட் சாகசப் பயணத்திற்காகப் புறப்பட்ட சிறிய ரக தனியார் விமானம் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கித் தீப்பற்றியதில், அதில் பயணித்த விமானி மற்றும் 11 பயணிகள் உட்பட 12 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேன்சாஸ் நகருக்குத் தெற்கே சுமார் 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'பட்லர் மெமோரியல்' விமான நிலையத்திற்கு அருகே உள்ள புல்வெளிப் பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக மிசூரி மாநில நெடுஞ்சாலைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்குள்ளான ஒற்றை எஞ்சின் கொண்ட 'பசிபிக் ஏரோஸ்பேஸ் 750XL' ரக விமானம் தனியார் சாகச நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் வானில் புறப்பட்டுள்ளது.

"விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்டு இடதுபுறமாகத் திரும்பிய உடனே அதன் எஞ்சின் ஆற்றலை  இழந்ததாகத் தெரிகிறது. இதனால் பைலட் விமானத்தை அருகில் உள்ள நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறக்க முயன்றுள்ளார். எனினும், கட்டுப்பாட்டை இழந்த விமானம் செங்குத்தாக மூக்குப்பகுதி தரையில் மோதும் வண்ணம்  புல்வெளியில் விழுந்து நொறுங்கி, உடனே பயங்கரமாகத் தீப்பற்றியது." என பட்லர் விமான நிலைய தற்காலிக மேலாளர் டெனிஸ் ஜேக்கப்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே மீட்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும், விமானத்திற்குள் இருந்த எவரையும் காப்பாற்ற முடியவில்லை. விபத்துக்கு முன்னர் யாராவது பாராசூட் மூலம் குதித்து தப்பிக்க முயன்றார்களா என வான்வழப்பாதையில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், அவ்வாறு யாரும் கண்டெடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்துப் புலனாய்வு செய்ய அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றின் விசேட விசாரணைக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

விபத்துக்குள்ளான இந்த விமானம் கடந்த 2010ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதுடன், குறுகிய ஓடுதளங்களில் இயங்கும் திறன் கொண்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இயங்கும் பாராசூட் நிறுவனங்களின் பாதுகாப்புத் தரநிலைகள் குறித்துப் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்துப் பேசிய முன்னாள் விபத்து புலனாய்வு நிபுணர் ஜெஃப் குஸெட்டி ,

வணிக ரீதியிலான பயணிகள் விமானங்கள் மற்றும் சாட்டர் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் கடுமையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விதிகள், இந்த ஸ்கைடைவிங் நிறுவனங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. இவை சாதாரண தனிநபர் விமானங்கள் பின்பற்றும் எளிய விதிகளின் கீழேயே இயங்குகின்றன. முறையற்ற பராமரிப்பு மற்றும் குறைபாடான பாதுகாப்பு உத்திகள் காரணமாகவே அமெரிக்காவில் கடந்த காலங்களில் பல ஸ்கைடைவிங் விபத்துக்கள் நேர்ந்துள்ளன வரலாற்று ரீதியாக நிரூபணமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3