அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிப் பிரயோகம்
24 வைகாசி 2026 ஞாயிறு 06:40 | பார்வைகள் : 1591
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர், பாதுகாப்புப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தின் பிரதான பாதுகாப்பு வலயத்திற்கு அருகாமையிலுள்ள வீதியொன்றில், நேற்று சனிக்கிழமை (23) பிற்பகல் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
வெள்ளை மாளிகைக்கு வெளியே கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளைக் குறிவைத்து, சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய எதிர்த்தாக்குதலில், குறித்த சந்தேகநபர் படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் துப்பாக்கிப் பரிமாற்றத்தின் போது, சம்பவ இடத்திற்கு அருகில் நின்றிருந்த சிவிலியன் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்துள்ள அதேவேளை, பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள்ளேயே இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து உடனடியாகச் செயற்பட்ட அமெரிக்க இரகசிய உளவுத்துறை மற்றும் பொலிஸ் குழுக்கள், வெள்ளை மாளிகையைச் சூழவுள்ள பகுதிகளைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன.
அத்துடன், வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டு, அப்பகுதியின் பாதுகாப்பு உச்சக்கட்டமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire