உலக சினிமா ஜாம்பவான்கள் பட்டியலில் ராஜமவுலி
4 ஆடி 2026 சனி 15:14 | பார்வைகள் : 955
இயக்குனர் ராஜமவுலியின் படங்கள் தெலுங்கில் உருவானாலும், இந்திய சினிமாவை வெளிநாட்டு ரசிகர்களும் போற்றும் விதமாக ஒரு மிகப்பெரிய சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தன, தற்போதும் கிடைத்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜமவுலி ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, பிரான்சில் உள்ள சினிமா திரையரங்கு ஒன்றில் அவருடைய "ஈகா" திரைப்படம் திரையிடப்பட்டதுடன், அவரது பங்களிப்பை போற்றும் விதமாக அவருடைய பெயரில் ஒரு நிரந்தர இருக்கை ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கு மேலும் கவுரவம் சேர்க்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் உள்ள புகழ்பெற்ற இன்ஸ்டிட்யூட் லூமியர் (Institut Lumière) அருங்காட்சியகத்தில் உள்ள திரைப்பட இயக்குனர்களின் சுவரில், உலக சினிமா ஜாம்பவான்களான குவென்டின் டோரான்டினோ, மார்ட்டின் ஸ்கோர்செசி, கிளின்ட் ஈஸ்ட்வுட் போன்றவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட அந்தச் சுவரில் ராஜமவுலியின் பெயரும் நிரந்தரமாக பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கவுரவம் குறித்து ராஜமவுலி கூறும்போது, "இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது என்னை நெகிழ வைத்தது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்..






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire