Paristamil Navigation Paristamil advert login

நடிகர் தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா ?

நடிகர் தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா ?

7 ஆடி 2026 செவ்வாய் 17:18 | பார்வைகள் : 853


தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ், சமீபத்தில் தனது 'ரசிகர்கள் நற்பணி இயக்கம்' சார்பாகப் புதிய கொடி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார். சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கொடியின் மையப்பகுதியில், தனுஷ் கைகளை கூப்பி வணக்கம் செலுத்துவது போன்ற உருவமும், அதன் அருகே பிரகாசமான ஒரு சிவப்பு நிற நட்சத்திரமும் இடம்பெற்றுள்ளன. இந்த திடீர் கொடி அறிமுகம், அவர் தமிழக அரசியல் களத்தில் கால் பதிக்கிறாரா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

கொடியில் உள்ள நட்சத்திரம் தனுஷின் 24 ஆண்டுகால கலைப் பயண வெற்றியைக் குறிப்பதாக ரசிகர்கள் கூறினாலும், அரசியல் நோக்கர்களோ இது ஒரு புரட்சிகர அரசியல் அடையாளம் என்கின்றனர். மேலும், கொடியில் உள்ள "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற வாசகம் அவரது அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

நடிகர் விஜய் கட்சி தொடங்கி, குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானதைத் தொடர்ந்து, சூர்யா, விஷால், ராகவா லாரன்ஸ் என பல நடிகர்கள் அரசியலை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தனுஷும் இணைந்துவிட்டாரோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.

இருப்பினும், புதிய கட்சி தொடங்குவது குறித்து தனுஷ் இன்னும் வாய் திறக்கவில்லை. இந்த நற்பணி மன்றக் கொடி விவகாரம் கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.