Paristamil Navigation Paristamil advert login

வெனிசுவேலா சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் 164 பேர் பலி, 971 பேர் காயம்!

வெனிசுவேலா சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் 164 பேர் பலி, 971 பேர் காயம்!

25 ஆனி 2026 வியாழன் 17:31 | பார்வைகள் : 1420


தென்அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை இரவு ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதோடு, 971க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வியாழக்கிழமை 25.06.2026 அறிவித்துள்ளார்.  

முன்னதாக பலி எண்ணிக்கை 32 ஆகக் காணப்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.  

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.2 ஆகவும், அடுத்த ஒரு நிமிடத்திற்குள் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.5 ஆகவும் பதிவாகியுள்ளது.

தலைநகர் கராகாஸிலிருந்து மேற்கே சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மொரோன் என்ற கடலோரப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

வெனிசுவேலா வரலாற்றில் கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அதிர்வுகள் அண்டை நாடான பிரேசிலின் அமேசான் பகுதி (சுமார் 1,700 கி.மீ தூரம்) மற்றும் கொலம்பியா வரை உணரப்பட்டுள்ளன.

கரையோரப் பகுதியான லா குவைரா மாநிலமே இந்த நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, "பேரழிவு மண்டலமாக" மாறியுள்ளது. அங்கு பல கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெனிசுவேலாவின் முக்கிய சர்வதேச விமான நிலையமான சைமன் பொலிவர் விமான நிலையம் கடுமையாகச் சேதமடைந்து மூடப்பட்டுள்ளது.

கராகாஸ் நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இயற்கை எரிவாயு விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சமிக்ஞைகளும் முற்றாக முடங்கியுள்ளன.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தியோஸ்டாடோ கபெல்லோ, தொடர் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் தற்காலிகமாக வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகள், பூங்காக்கள் மற்றும் வாகனங்களிலேயே இரவைக் கழித்துள்ளனர். பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது

வெனிசுவேலாவில் நிலவும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் பலவும் உதவ முன்வந்துள்ளன.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் அவசர மனிதாபிமான உதவிகளை உடனடியாக வெனிசுவேலாவிற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

கட்டார், மெக்சிகோ, எல் சல்வடோர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஏற்கனவே தங்களது சிறப்பு மீட்புக் குழுக்களையும் மோப்ப நாய்களையும் வெனிசுவேலாவிற்கு அனுப்பியுள்ளன.

எக்குவடோர், பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.  

வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இந்த அவசர உதவிக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். நாடே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ள இந்த வேளையில், மக்கள் அனைவரும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3