வெனிசுவெலா நிலநடுக்கம் - ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடுப்பத்தினர் இடிபாடுகளுக்குள் சடலங்களாக மீட்பு!
29 ஆனி 2026 திங்கள் 11:50 | பார்வைகள் : 1824
வெனிசுவெலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ரிச்டர் 7.2 மற்றும் 7.5 அளவிலான மிகக் கொடூரமான இரட்டை பூமியதிர்ச்சிப் பேரழிவில், ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து டிஃபெண்டர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 1,500க்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்டுள்ள இந்த இயற்கை அனர்த்தத்தில் நேர்ந்த இவர்களது மரணங்கள், விளையாட்டுத்துறையினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
வெனிசுவெலாவின் இரண்டாம் நிலை கால்பந்து கழகம் மாரிடிமோ டி லா குவைரா அணியில் 38 வயதான லூகாஸ் ட்ரெஜோ விளையாடி வருகிறார்.
பூமியதிர்ச்சி ஏற்பட்டபோது அவர் தனது அணியுடன் கராகஸ் நகரில் தங்கியிருந்துள்ளார். ஆனால், பிளாயா கிராண்டே பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் பூமியதிர்ச்சியால் முற்றாக இடிந்து தரைமட்டமானது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ட்ரெஜோ உடனடியாகத் தனது சொந்த ஊருக்கு விரைந்ததுடன், தனது குடும்பத்தினரைக் கண்டுபிடித்துத் தருமாறு சமூக ஊடகங்களில் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார்.
"பிளாயா கிராண்டேவில் உள்ள எங்கள் கட்டடம் இடிந்து விழுந்துவிட்டது. என் குடும்பத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. தயவுசெய்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் அங்கு இருந்திருக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது தந்தை, சகோதரன் மற்றும் தீயணைப்புப் படையினர் எனப் பலரும் இணைந்து இரவு பகலாக, 74 மணி நேரத் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டு, பின்னர், ட்ரெஜோவின் மனைவி யானினா மரனெல்லா மற்றும் அவர்களது இரு குழந்தைகளான ஆரோன், அய்ன்ஹோவா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சடலங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து ட்ரெஜோவின் நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான எட்சன் டோர்டோலெரோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "லூகாஸ் ட்ரெஜோவின் குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளன என்பதை வெனிசுவெலா மற்றும் அர்ஜென்டினா மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு அனைவரும் உரிய மரியாதையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
மாரிடிமோ கழகம் மற்றும் வெனிசுவெலாவின் முதன்மை லீக் கழகமான டெபோர்டிவோ லா குவைராவும் ட்ரெஜோவின் இந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.
துரதிர்ஷ்டவசமாக, லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பம் மட்டுமன்றி, மாரிடிமோ கழகத்தைச் சேர்ந்த மேலும் சிலரும் இந்த பூமியதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கழகத்தின் இளம் வளர்ந்து வரும் ஆட்டக்காரரான 14 வயது சிறுவன் விக்டர் பாலாசியோஸ் பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கழகத்தின் நிர்வாகப் பணியாளரான அட்ரியானா அரங்குரென் என்பவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
தற்போது வரை வெனிசுவெலா பூமியதிர்ச்சியில் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சர்வதேசக் குழுக்களின் தேடுதல் வேட்டை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire