Paristamil Navigation Paristamil advert login

செல்போனில் வரும் தேவையற்ற அழைப்புகளுக்கு ஏ.ஐ. மூலம் மத்திய அரசு நடவடிக்கை

செல்போனில் வரும் தேவையற்ற அழைப்புகளுக்கு ஏ.ஐ. மூலம் மத்திய அரசு நடவடிக்கை

13 ஆவணி 2026 வியாழன் 06:39 | பார்வைகள் : 283


செல்போனில் தொடர்ந்து வரும் தேவையற்ற விளம்பர அழைப்புகள், குறுந்தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏ.ஐ. மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

4 நிறுவனங்கள்செல்போனில் தொடர்ந்து வரும் தேவையற்ற விளம்பர அழைப்புகள், குறுந்தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த தேவையற்ற தகவல்களை அனுப்புபவர்களை ஏ.ஐ. மூலம் கண்டறிந்து, தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் அவர்களின் தொலைத் தொடர்பு சேவைகளை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல். ஆகிய 4 நிறுவனங்களும் ஏ.ஐ. அடிப்படையிலான ஸ்பேம் கண்டறியும் அமைப்புகளை செயல்படுத்தி உள்ளன.

இந்த தொழில்நுட்பம் மூலம் தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் கண்டறியப்பட்டு, சந்தேகத்துக்குரிய தகவல்களை அனுப்புபவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

எச்சரிக்கைஏ.ஐ. மூலம் ஒரு தகவல் ஸ்பேம் என்று அடையாளப்படுத்தப்படுவது மட்டுமே இறுதி முடிவாக கருதப்படாது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும்.

ஒரே நபருடன் தொடர்புடைய 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொலைபேசி எண்கள் 10 நாட்களுக்குள் சந்தேகத்துக்குரிய ஸ்பேம் தகவல்களை அனுப்பியது கண்டறியப்பட்டால், அந்த நபரின் வாடிக்கையாளர் விவரங்கள் (கே.ஒய்.சி.) மீண்டும் சரிபார்க்கப்படும்.

ஸ்பேம் தகவல்களை அனுப்புவதற்காக தொலைத்தொடர்பு வசதிகள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந் தப்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் பிற தொலைத்தொடர்பு வசதிகளின் அவுட்கோயிங் வசதி துண்டிக்கப்படும். அந்த நபர் கருப்புப் பட்டியலிலும் சேர்க்கப்படுவார்.

ஸ்பேம் தகவல்களை அனுப்புவதாக அதிக அளவில் சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை தகவல்களையும் அனுப்பி வருகின்றன. இந்த நடவடிக்கை கடந்த ஜூன் 23-ந் தேதி தொடங்கிய நிலையில், முதல் ஒரு வாரத்தில் மட்டும் 2 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமான எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.