Paristamil Navigation Paristamil advert login

முல்லை பெரியாறு பராமரிப்பு பணிக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை!தமிழக அரசு

முல்லை பெரியாறு பராமரிப்பு பணிக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை!தமிழக அரசு

13 ஆவணி 2026 வியாழன் 07:42 | பார்வைகள் : 287


முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது' என, உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நம் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை.

தென் மாவட்டங்களுக்கான பாசனங்களுக்கு இந்த அணை உயிர் நாடியாக உள்ளது. அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், பலப்படுத்தும் பணிகள் முடிந்ததும் 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது.

எனினும், கேரள அரசு இந்த உத்தரவை பின்பற்றாமல் இருப்பதால், இரு மாநிலங்களுக்கு இடையே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் புதிதாக நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

முல்லை பெரியாறு மற்றும் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக இயந்திரங்களை கொண்டு செல்ல ஏதுவாக, கேரள வனப்பகுதியில் சில மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், கேரள அரசு மரங்களை வெட்ட இதுவரை அனுமதி வழங்காமல் காலம் கடத்தி வருகிறது.

முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த, பூச்சு வேலைகளை மேற்கொள்வதற்கு அணையின் கண்காணிப்பு குழு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டுதல்படி பணிகளை செய்யவிடாமலும் கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

அணையின் பராமரிப்பு பணிகளுக்கு அவசியமான வல்லக்கடவு அணை சாலையை சீரமைக்க தமிழக அரசு சார்பில் 87.64 லட்சம் ரூபாய் நிதி கேரள அரசிடம் வழங்கி பல மாதங்கள் கடந்து விட்டன. எனினும், இது வரை சாலை பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை கேரள அரசு மேற்கொள்ளவில்லை.

முல்லை பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டை கணக்கிட கேடக்கப்பட்ட சில முக்கிய தரவுகளை கூட கேரள அரசு இதுவரை வழங்கவில்லை. நிகழ்நேர கண்காணிப்பு தொழில்நுட்ப தரவுகளையும் தமிழகத்திற்கு தராமல் கேரளா தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.

எனவே, அணையை பலப்படுத்தும் பணியை தாமதமின்றி மேற்கொள்ள வசதியாக, கேரள வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.