Paristamil Navigation Paristamil advert login

நிதி ஆதாரங்கள் மேம்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்; நிதியமைச்சர் மரிய வில்சன்

நிதி ஆதாரங்கள் மேம்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்; நிதியமைச்சர் மரிய வில்சன்

13 ஆவணி 2026 வியாழன் 08:46 | பார்வைகள் : 267


நிதி ஆதாரங்கள் மேம்பட்டதும், தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும், என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து, அவர் பேசியதாவது:

தமிழக நிதிநிலை குறித்து, வெள்ளை அறிக்கையில் வெளிப்படையாக தெரிவித்தோம். மூன்று துறைகளின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்து, முதல்வரிடம் அறிக்கை அளித்துள்ளோம். எந்த அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை, முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்.

'தமிழகத்தின் சொந்த வரி வருவாய், 2 லட்சத்து, 29,579 கோடி ரூபாயில் இருந்து, 2 லட்சத்து, 26,870 கோடியாக குறைந்தது ஏன்; வரி வருவாய் குறைந்த நிலையில் செலவு ஏன் அதிகரித்தது' என, பலரும் கேள்வி எழுப்பினர்.

கடந்த 2024- - 25 மற்றும் 2025 - -26 நிதியாண்டுகளில், சொந்த வரி வருவாய் வளர்ச்சி, 8 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. முந்தைய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் 19 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

ஆனால், சொந்த வரி வருவாய் வளர்ச்சி, 12 சதவீதம்தான் இருக்கும் என்று, வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

இதை கருத்தில் கொண்டால், சொந்த வரி வருவாய், 2.15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். கடந்த மூன்று மாதங்களில், கலால் வரி, மோட்டார் வாகன வரி, மது உற்பத்தியாளர் மீதான கூடுதல் சிறப்பு கட்டணம், பதிவுத் துறை வருமானம் உள்ளிட்டவை வாயிலாக, 15,000 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது.

கட்சி நிதி மற்றும் ஊழலை ஒழித்ததோடு, செலவுகளை குறைத்துள்ளதால் வருவாய் அதிகரித்துள்ளது. வருவாய் திரட்டல், செலவின மேலாண்மை தொடர்பாக உயர் மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிதி ஆதாரங்களுக்கான ஆலோசனைகளை இக்குழு வழங்கும். நிதி ஆதாரங்கள் மேம்பட்டதும், தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தன்னுடைய தமிழ் பேச்சு குறித்து சட்டசபையில் விமர்சனம் எழுந்ததால், சில நாட்களுக்கு முன் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமடைந்தார். இது தொடர்பாக, அவர் பேசியதாவது:

என்னையும், திமுகவை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் தியாகராஜனையும் ஒப்பிட்டு, இங்கே சிலர் பேசினர். மொழி எனக்கு ஒரு தடை தான். அன்று நான் ஆவேசப்பட்டது உண்மை தான். தற்போது பட்ஜெட் விவாதத்தில், எம்எல்ஏக்கள் பேசியது எனக்கு பாடமாக இருந்தது. சில விஷயங்களை கற்றுக் கொண்டு, வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்.

எம்ஜிஆரின் அரவணைப்பில் வளர்ந்தவர், என்னுடைய 'காட் பாதர்' ஜேப்பியார். இவையெல்லாம், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுவுக்கு தெரியும். அவர் என்னை பாதுகாக்கும் வகையில் பேசியதற்காக நன்றி. கடந்த, 1987க்குப் பின் அரசியல் பக்கம் நாங்கள் வரவில்லை. இப்போது, முதல்வர் விஜய் வாயிலாக அரசியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு மரிய வில்சன் பேசினார்.