சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற கனிமொழி!
14 ஆவணி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 227
டில்லியில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் தி.மு.க., பங்கேற்றது, தேசிய அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.,வுடன் தி.மு.க., நெருக்கம் காட்டுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டில்லியில், பார்லிமென்ட் வளாகத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தை, 'இண்டி' கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி அந்த விருந்தில் பங்கேற்றார். அதே நேரத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி தலைவர்கள் விருந்தில் பங்கேற்கவில்லை.
லோக்சபா தொகுதி மறுவரையறை சட்ட மசோதா விவகாரத்தில், காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், இவ்விவகாரத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த தி.மு.க., தற்போது தனது அணுகுமுறையை மாற்றியுள்ளது.
'தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பது தி.மு.க.,வின் நோக்கம் அல்ல. தமிழகத்திற்கான பார்லிமென்ட் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதுதான் முக்கிய நோக்கம்' என தி.மு.க., தற்போது விளக்கம் அளித்து வருகிறது.
இது குறித்து, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் கூறுகையில், ''தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க., ஒருபோதும் எதிரானது அல்ல. நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும். தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத பார்லிமென்ட் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்,'' என்றார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய பா.ஜ., அரசின் அணுகுமுறைக்கும் தி.மு.க.,வின் தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உருவாகியுள்ள நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்திலும் தி.மு.க., பங்கேற்றுள்ளது. இதனால், பா.ஜ.,வுடன் தி.மு.க., நெருக்கம் காட்டுகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
''மாநில உரிமையை காப்பதில், தனது அடையாளத்தை விட்டுக் கொடுக்காமல் தொகுதி மறுவரையறை விவகாரத்தை தி.மு.க., கையாள விரும்புகிறது. 'இண்டி' கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதால், தேசிய அளவில் புதிய கூட்டணி அமைக்கவும் தி.மு.க., விரும்புகிறது. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதனால் தான், 'தேசிய அளவில் நம்பகத்தன்மை இல்லாத கட்சி காங்கிரஸ்' என பிரசாரம் செய்யுமாறு, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்,'' என அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டில்லியில் மத்திய அமைச்சர் நட்டாவை தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் சந்தித்ததும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக தமிழச்சி தங்கப்பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தமிழகத்தில் இருந்து முதுகலை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மத்திய அமைச்சர் நட்டாவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். குறிப்பாக, தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக தேர்வு நகரங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து தெரிவித்தேன்.
இதனால், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பயணம் மற்றும் தங்குமிடங்களை ஏற்பாடு செய்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இது போன்ற பிரச்னைகளால் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.
எனவே, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்னையை மறுபரிசீலனை செய்து, தேர்வு நகரங்கள் ஒதுக்கீடு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன்,'' என அந்த அறிக்கையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்றது, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க.,வின் மாறிய அணுகுமுறை மற்றும் மத்திய அமைச்சர் நட்டாவை தமிழச்சி தங்கப்பாண்டியன் சந்தித்தது ஆகிய சம்பவங்கள், தி.மு.க.,வின் தேசிய அரசியல் வியூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்தச் சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை மட்டும் அடிப்படையாக வைத்து தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதி என முடிவு செய்வது தற்போதைக்கு அரசியல் ஊகமாகவே பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire