Paristamil Navigation Paristamil advert login

தேசிய நெடுஞ்சாலையில் புதிய விதி அமல்! 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்

தேசிய நெடுஞ்சாலையில் புதிய விதி அமல்! 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்

14 ஆவணி 2026 வெள்ளி 06:20 | பார்வைகள் : 232


தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால், சம்பவ இடத்திற்கு 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றடைய வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆம்புலன்ஸ் செல்லத் தவறினால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ஒவ்வொரு தவறுக்கும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் வகையில் புதிய நடைமுறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமல்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் உள்கட்டமைப்பு வசதிகள், முன்பைவிட பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், விபத்தில் சிக்குவோரை விரைவாக மீட்டு, தாமதமின்றி மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும், மத்திய கணக்கு தணிக்கையாளரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையடுத்து, விபத்து நேரங்களில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அவசரகால பராமரிப்பு திட்டத்தின் கீழ், அவசரகால கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, அவசர அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்திலிருந்து, 10 கி.மீ., சுற்றளவுக்குள் நடைபெறும் விபத்து பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் 10 நிமிடங்களுக்குள் சென்றடைய வேண்டும். விபத்து நடைபெற்ற இடம் 10 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் இருந்தால், அதற்கேற்ப கால அளவு கணக்கிடப்படும்.

மேலும், அவசர அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள், விபத்தில் சிக்கியவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும்.

இந்த காலக்கெடுவை தவறவிட்டாலோ அல்லது அவசர அழைப்பை நிராகரித்தாலோ, சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஒப்பந்ததாரருக்கு ஒவ்வொரு தவறுக்கும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 3,000 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 1,000 ரோந்து வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் இயக்கத்தைத் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., கருவிகள் மற்றும் சிறப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ் வாகனங்களில் உரிய மருத்துவ உபகரணங்கள் அல்லது தேவையான ஊழியர்கள் இல்லாவிட்டாலும், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அல்லது அவசரநிலை ஏற்பட்டால், பொதுமக்கள் 1033 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அவசர உதவியைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.