Paristamil Navigation Paristamil advert login

சென்னையில் இன்று வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு! முதல்-அமைச்சர் பங்கேற்பு

சென்னையில் இன்று வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு! முதல்-அமைச்சர் பங்கேற்பு

14 ஆவணி 2026 வெள்ளி 07:54 | பார்வைகள் : 196


ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சென்னையில் இன்று (வியாழக்கிழமை) 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு' நடைபெற்றது.

### வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 10-ந் தேதி தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அரசு நிர்வாக நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் த.வெ.க. அரசு, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 96 நாட்கள் நிறைவடையும் நிலையில், 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு' சென்னையில் இன்று நடைபெற்றது.

### 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.67,452 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. இதன் வாயிலாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.

ஏற்கனவே கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீடுகளையும் சேர்த்து, த.வெ.க. அரசு பதவியேற்ற 100 நாட்களில் மொத்தம் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

### ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்ப்பு

தொடர்ந்து, ரூ.4,4 கோடியில் 8 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.2,676 கோடி மதிப்பிலான 5 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அதோடு, ரூ.777.74 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார். 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வான 20 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

இதன் மூலம் மொத்தம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. இதன் வாயிலாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

### எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு?

* தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் ரூ.2,500 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* அல்ட்ராவயோலெட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.779 கோடி முதலீடு செய்கிறது. கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயோலெட் நிறுவனத்தின் EV ஆலை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

* டெய்ம்லர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது. டெய்ம்லர் நிறுவனத்தின் ஆலை காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட உள்ளது.

* ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது.

* லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்கிறது.

* தமிழ்நாட்டில் டைட்டன் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது.

* செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது.

* ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்கிறது.

* பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது.

### ஒரகடம் டைம்லர் ஆலை விரிவாக்கம்

சென்னையில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026'-ல், ஜெர்மனியைச் சேர்ந்த டைம்லர் நிறுவனத்துடன் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 400 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் தனது உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை ரூ.4,000 கோடி முதலீட்டில் டைம்லர் நிறுவனம் மேம்படுத்த உள்ளது.

இதன் மூலம் வணிக வாகனங்களின் வடிவமைப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்திப் பணிகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. மேலும், 400 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.

### திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு

சென்னையில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026'-ல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆவிட் குழுமமும் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புற உள்கட்டமைப்பு, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் சுரங்க உபகரண உற்பத்தித் துறைகளில் இந்நிறுவனம் களமிறங்க உள்ளது.

முதற்கட்டமாக ரூ.7,000 கோடி முதலீட்டில் திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் திட்டங்களை செயல்படுத்த உள்ள இந்நிறுவனம், இதன் மூலம் 12,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

### பிற முக்கிய முதலீடுகள்

* YKK ஜப்பான் நிறுவனம் ரூ.1,651 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 4,316 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.

* அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு செய்கிறது.

* 'அல்ட்ரா வெயலட்' நிறுவனம் ரூ.779 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.

* சூப்பர் மைக்ரே நிறுவனம் ரூ.477 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.