Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியிலும் சுத்தம்: வெற்றிகரமாக சாதித்தது இந்தியா

விண்வெளியிலும் சுத்தம்: வெற்றிகரமாக சாதித்தது இந்தியா

14 ஆவணி 2026 வெள்ளி 08:56 | பார்வைகள் : 193


சர்வதேச விண்வெளிக் கொள்கையைப் பின்பற்றி, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்டின் மேல்பாகத்தை வெறும் ஒன்பது மாதங்களில் பூமிக்குத் திருப்பி, விண்வெளிக் கழிவுகளை குறைத்து சுத்தமான விண்வெளியை பராமரிக்கும் முயற்சியில் இந்தியா முக்கிய சாதனையை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'எல்.வி.எம்., 3 - எம்5' ராக்கெட் மூலம் 'சி.எம்.எஸ் - 3' தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்ட பின்னர், எந்தவிதமான விபத்தும் ஏற்படாத வகையில், ராக்கெட்டின் மேல்பகுதி தொடர்ந்து சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது.

அந்த ராக்கெட் பாகத்தின் இயக்கத்தை, ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள எம்.ஓ.டி.ஆர்., 'ரேடார்' மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வந்தது.

காலப்போக்கில், அந்த ராக்கெட் பாகம் படிப்படியாக விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி இறங்கத் தொடங்கியது. அப்போது, பூமியின் வளிமண்டலத்தில் உள்ள காற்றுடன் உராய்வு ஏற்பட்டதால் உருவான அதிக வெப்பத்தின் காரணமாக, ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகின.

எஞ்சியிருந்த சில பாகங்கள் மட்டும் கடந்த ஜூலை 30-ம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தன. இதை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' உறுதி செய்துள்ளது.

### விண்வெளிக் கழிவுகளை குறைக்கும் முயற்சி

பொதுவாக, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய பின்னர், ராக்கெட்டின் பல்வேறு பாகங்கள் விண்வெளியில் கைவிடப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளிக் கழிவுகளாக சுற்றிக் கொண்டிருக்கும்.

இவ்வாறு சுற்றும் விண்வெளிக் கழிவுகள், பின்னர் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களின் மீது மோதி விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இந்த அபாயத்தைத் தவிர்க்கும் வகையில், முறையான திட்டமிடலுடன் செயல்பட்ட இஸ்ரோ, ராக்கெட்டின் மேல்பாகத்தை வெறும் ஒன்பது மாதங்களிலேயே மீண்டும் பூமியின் வளிமண்டலத்துக்குள் கொண்டு வந்து, பெரும்பாலான பாகங்கள் எரிந்து அழியும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் விண்வெளிக் கழிவுகள் நீண்ட காலம் சுற்றுப்பாதையில் இருப்பதைத் தவிர்த்து, விண்வெளியை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கும் முயற்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.