Paristamil Navigation Paristamil advert login

தொகுதி மறுவரையறை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

தொகுதி மறுவரையறை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

14 ஆவணி 2026 வெள்ளி 09:20 | பார்வைகள் : 171


மத்திய அரசு உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழக சட்டசபையில் நேற்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தத் தீர்மானம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக சட்டசபையில் நடைபெற்ற விவாதங்களை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லோக்சபா எம்.பி.,க்களின் தற்போதைய எண்ணிக்கையான 543-ஐ எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்து நிரந்தரமாகப் பேண வேண்டும். அதேபோல், மாநிலங்களின் தற்போதைய பார்லிமென்ட் பிரதிநிதித்துவ அளவும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும், லோக்சபா மற்றும் ராஜ்யசபா இடையேயான தற்போதைய பிரதிநிதித்துவ விகிதமான 2.2:1 என்பதும் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்.

இதற்காக, 543 உறுப்பினர்கள் என்ற தற்போதைய எண்ணிக்கையின் அடிப்படையில், வரும் லோக்சபா தேர்தலில் இருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

### தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்

அரசியலமைப்பின் 81(2)(a)-ம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், கடந்த 1967-ம் ஆண்டில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 41-ல் இருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டதைப் போன்ற நிலை மீண்டும் உருவாகக்கூடும்.

அவ்வாறு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தென் மாநிலங்கள் தங்களுக்குள்ள கணிசமான லோக்சபா தொகுதிகளை இழக்க நேரிடும்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, சிறந்த பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள தென் மாநிலங்களுக்கு, எந்தவொரு தொகுதி மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதியை ஏற்படுத்துவதாக அமையும்.

எனவே, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமர் பரிசீலித்து, மாநிலங்களின் தற்போதைய பார்லிமென்ட் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.