வரி விதிப்பு இல்லாமல் வருவாயை ! நிபுணர் குழுவிடம் அரசு வலியுறுத்தல்
14 ஆவணி 2026 வெள்ளி 10:08 | பார்வைகள் : 179
பெரும்பாலான மக்களை பாதிக்கும் வகையில் வரிகளை உயர்த்தாமல், மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு, பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக் குழு துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழுவிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன், கடந்த மார்ச் மாத நிலவரப்படி, 13.18 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
த.வெ.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, மாதத்திற்கு 2,025 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு கூடுதலாக 24,300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதேபோல், ஆண்டுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், ஆண்டுக்கு கூடுதலாக 10,000 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் நிலை உள்ளது.
இதனால், அரசின் நிதி நெருக்கடியை குறைத்து, மாநில வருவாயை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக, பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக் குழு துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஆறு பேர் கொண்ட வருவாய் அதிகரிப்பு குழுவை தமிழக அரசு கடந்த மாதம் அமைத்தது.
இக்குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதற்கு முன்பாக, குழுவின் முதல் கூட்டம் சமீபத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது.
இந்தக் குழுவிடம், பொதுமக்களில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் வகையில் வரிகளை உயர்த்தாமல், அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
### ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரை வருவாய் இழப்பு
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் கிடைக்கும் கனிமவளங்களுக்கு கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அதிக தேவை உள்ளது. ஆனால், கனிமச் சுரங்கங்களை நடத்த தனியாருக்கு குத்தகைக்கு விடுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன.
அதேபோல், பத்திரப்பதிவில் சந்தை மதிப்பைவிட குறைவாக சொத்துகளை பதிவு செய்வது, மதுபானங்கள் கொள்முதல் செய்வதில் நடைபெறும் முறைகேடுகள், ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு, ஒப்பந்தப் பணிகளுக்கான 'டெண்டர்' மதிப்பீட்டில் கூடுதல் விலைப்புள்ளி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இந்த முறைகேடுகளை கட்டுப்படுத்தி, இழக்கப்படும் வருவாயை அரசின் கஜானாவுக்கு திருப்ப முடிந்தால், நிதி நெருக்கடியை சமாளிப்பதுடன், புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.
### வரிகளை உயர்த்தாமல் வருவாய் அதிகரிப்பு
முதல்வர் விஜயை சந்திக்கும் தொழில்துறையினர் மற்றும் பட்ஜெட் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்கேற்ற பல்வேறு தரப்பினர், கடந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி, மின் கட்டணம் உள்ளிட்டவற்றால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், உயர்த்தப்பட்ட இந்தக் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போதைய நிதி நிலைமையில், ஏற்கனவே உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழுவிடம், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வரிகளை உயர்த்தாமல், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு அரசு தெரிவித்துள்ளது.
### மதுபானம், கனிமவளம், பத்திரப்பதிவு மூலம் கூடுதல் வருவாய்
கூடுதலாக எதிர்பார்க்கப்படும் வருவாயில், மதுபானம், கனிமவளம், பத்திரப்பதிவு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட துறைகள் மூலம் மட்டும் 80 முதல் 90 சதவீதம் வரை வருவாயை ஈட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழு, மூன்று மாதங்களில் தனது அறிக்கையை அரசிடம் அளிக்க உள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெறும் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதன் பின்னர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிக நிதி தேவைப்படும் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire