எல்லாம் ரீல்ஸும், ரீலும் விடும் ஆட்சி தான்: தவெக அரசை விமர்சித்த இபிஎஸ்
15 ஆவணி 2026 சனி 06:48 | பார்வைகள் : 167
தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்காக எந்தவொரு புதிய திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. “எல்லாம் ரீல்ஸும், ரீல் விடும் ஆட்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு, மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமை வகித்தார். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது:
காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகா ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
மேலும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தற்போது வறட்சி நிலவி வரும் நிலையில், ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
100 நாள் ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் கூறியதாவது:
கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை முழுமையாகத் தடுத்து நிறுத்தவும், அதற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கான எந்தவொரு புதிய திட்டமும் இல்லை. எல்லாம் ரீல்ஸும், ரீல் விடும் ஆட்சியும்தான் நடைபெற்று வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஆட்சியின் முதல் 100 நாட்களில்தான், அந்த ஆட்சி எத்தகைய திட்டங்களை வகுக்கிறது, அதன் மூலம் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதை மக்கள் கவனிப்பார்கள்.
ஆனால், இந்த 100 நாட்களில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து விவசாயிகள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியோர் போராட்டம் நடத்துவதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியில் மக்களுக்கான எந்தத் திட்டங்களையும் காண முடியவில்லை.
பட்ஜெட்டிலும், வேளாண் பட்ஜெட்டிலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்களுக்கு ‘வெற்றி’ எனப் பெயர் சூட்டியிருப்பதுதான் இந்த ஆட்சியின் 100 நாள் சாதனையாக உள்ளது.
சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்டதைப் போல, இன்னும் பல வரிகள் உயர்த்தப்பட உள்ளன. இது ஆரம்பம் மட்டுமே என்றும் இபிஎஸ் கூறினார்.
நிர்வாகிகள் புறக்கணிப்பு குறித்து பதில்
இன்றைய போராட்டத்தை அதிருப்தி நிர்வாகிகளான எஸ்பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் புறக்கணித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த இபிஎஸ், “சீப்பை ஒழித்து வைத்தால் திருமணம் தடைப்பட்டு போய்விடுமா?” என்று தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire