Paristamil Navigation Paristamil advert login

விண்வெளி வீரர்களுக்காக ‘ககன்யாத்ரி நிவாஸ்’ – இஸ்ரோ திட்டம்

விண்வெளி வீரர்களுக்காக ‘ககன்யாத்ரி நிவாஸ்’ – இஸ்ரோ திட்டம்

16 ஆவணி 2026 ஞாயிறு 20:50 | பார்வைகள் : 155


விண்வெளி வீரர்களுக்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.26 கோடி செலவில், ‘ககன்யாத்ரி நிவாஸ்’ என்ற தனிமைப்படுத்தும் கட்டமைப்பை உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனுடன், ‘பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன்’ என்ற பெயரில் விண்வெளி நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கான பயிற்சிக்கூடம் மற்றும் தனிமைப்படுத்தும் மையம் ஆகியவை இந்தியாவில் இல்லாததால், ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட விண்வெளி வீரர்களான பிரசாந்த் நாயர், சுபான்ஷு சுக்லா, அங்கத் பிரதாப் மற்றும் அஜித் கிருஷ்ணன் ஆகியோர் ரஷ்யாவின் ‘காகரின்’ விண்வெளி மையம் மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் பயிற்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இனி, இந்திய விண்வெளி வீரர்களுக்கு இந்தியாவிலேயே முழுமையான பயிற்சி அளிக்கும் வகையில், தனிமைப்படுத்தும் மையம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.26.02 கோடி மதிப்பீட்டில் ‘ககன்யாத்ரி நிவாஸ்’ என்ற பெயரில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த மையத்தில், விண்கலத்தில் பல மணி நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும். மேலும், விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்வதற்கு முன் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் மருத்துவக் கண்காணிப்பு, உடற்பயிற்சி மற்றும் தங்குமிட வசதிகள் உலகத் தரத்தில் வழங்கப்படும்.