தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் கொடுங்கள்: அண்ணாமலை வலியுறுத்தல்
16 ஆவணி 2026 ஞாயிறு 21:51 | பார்வைகள் : 150
தவெக அரசுக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்க வேண்டும். அதன் பிறகு மாநில அரசு தவறு செய்தால், அதை முதலில் சுட்டிக்காட்டும் அமைப்பாக நாம் இருப்போம் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அண்ணாமலை தலைமையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நடைபெற்ற இந்தப் பேரணியில், நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேரணியில் அண்ணாமலை பேசியதாவது:
20 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆகஸ்ட் மாதத்தை சுற்றுச்சூழல் மாதமாகக் கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு தனி மனிதரும் தாமாக முன்வந்து, இந்த மாற்றத்தில் நாங்களும் இருக்கிறோம் என்று கூற வேண்டும்.
தாமிரபரணியை சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளோம். வைகை நதியையும் சுத்தம் செய்து வருகிறோம். பரமத்தி வேலூரில் இருந்து காவிரி ஆற்றை சுத்தம் செய்யும் பணியையும் ஆரம்பித்துள்ளோம். கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை 175 கி.மீ. கடற்கரையை நான்கு வாரங்களாக சுத்தம் செய்து வருகிறோம்.
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பைப் பொறுத்தவரை, ஒரு பணியை எடுத்துக்கொண்டால் அதை முழுமையாக முடித்துக் காட்ட வேண்டும். 365 நாட்கள் நிறைவடையும் போது மக்கள் அந்த மாற்றத்தை பார்க்க வேண்டும். இங்கு யாரும் தொண்டர்கள் கிடையாது. அனைவரும் தலைவர்கள் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். இந்த மாதத்தில் மட்டும் 16 நாட்களில் தமிழகத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக 1,400-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு இதுவரை ஒரு லட்சத்து 6 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியுள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் பலர் குப்பைகளை அகற்றுவதைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. வைகை நதியில் நிற்கக்கூட முடியாத அளவுக்கு குப்பைகள் உள்ளன. நமது தொண்டர்கள் அவற்றை அகற்றும்போது மூச்சுவிட முடியாத நிலை ஏற்படுகிறது. இருந்தாலும் முகம் சுழிக்காமல் அவர்கள் வைகை தாயை சுத்தம் செய்கின்றனர். காவிரி, தாமிரபரணி நதிகளையும் சுத்தம் செய்கின்றனர். இதுதான் நமக்கு வேண்டும்.
அடிப்படை அரசியல் கட்டமைப்பையும், நல்ல அரசியல் கட்டமைப்பையும் உருவாக்க வேண்டுமானால், அரசியலுக்கு வரும் தொண்டர்கள், தலைவர்கள் என யாராக இருந்தாலும் சேவை மனப்பான்மையுடன் வர வேண்டும். அப்போதுதான் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்ற முடியும். ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் நாம் அனைவரும் தலைவர்களாக ஒவ்வொரு படியாக முன்னேறி வருகிறோம்.
### 50 லட்சத்தை நோக்கி
இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட எந்த அமைப்பில் 73 நாட்களில் 20 லட்சம் பேர் தொண்டர்களாக இருக்கின்றனர்? பல ஆண்டுகளாக இயங்கி வரும் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் உள்ளன. எங்களது இலக்கு 50 லட்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
எங்களுக்கு வெறும் எண்ணிக்கை தேவையில்லை. எங்களது அமைப்பையும், பணியையும், அதனால் ஏற்படும் மாற்றத்தையும் பார்த்து ஒவ்வொருவராக வந்து 50 லட்சம் பேரை எட்ட வேண்டும். 20 லட்சம் பேரும் ஆளுக்கு ஒருவரை அழைத்து வந்தால் எண்ணிக்கை 40 லட்சமாகிவிடும் என்று கூறலாம். ஆனால், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நோக்கம் அதுவல்ல.
மாற்றத்துக்காக வரக்கூடிய 50 லட்சம் பேர் இணைந்த பிறகு, அதை அரசியலாக மாற்றி, மக்களுக்கான அரசியலை கையில் எடுக்கப் போகிறோம். அதற்கு நமக்கு பொறுமை மிகவும் அவசியம்.
அடிப்படை அரசியலில் இருந்தே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வந்துள்ளோம். தலைவர்கள் டெல்லியில் அமர்ந்து தமிழகத்துக்கான முடிவுகளை எடுக்கக் கூடாது. சென்னையில் முக்கியமான வீட்டில் அமர்ந்தும் தலைவர்கள் முடிவெடுக்கக் கூடாது. ஒவ்வொரு கிராமத்திலும் அந்த கிராமத்துக்கான முடிவை தலைவர்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் தலைவர்கள் அமர்ந்து அந்த நகரத்துக்கான முடிவை எடுக்க வேண்டும்.
டெல்லி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன், ஈசிஆர் பனையூர், கோபாலபுரம் ஆகிய இடங்களில் அமர்ந்து தான் முடிவு எடுப்பேன் என்ற காலம் மாறிவிட்டது. யாரையும் குறை கூறவில்லை. அடிப்படையில் இருக்கும் தலைவர்கள் தங்கள் ஊருக்கான, சமுதாயப் பிரச்னைகளுக்கான முடிவுகளை எடுக்கும்போதுதான் நிலையான அடிப்படை மாற்றம் ஏற்படும்.
தமிழகத்தில், இந்திய அளவில் நிலத்தடி நீரை ஒவ்வொரு ஆண்டும் 73 சதவீதம் உறிஞ்சி எடுக்கிறோம். மழை பெய்யவில்லை என்றால் வறட்சி ஏற்படும். இதனால்தான் ஏரி, குளங்களை சுத்தம் செய்து வருகிறோம்.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 957 நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் 50,197 நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. இது ஜல்சக்தித்துறை அமைச்சர் அளித்த புள்ளிவிவரம். பல இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
### அரசியல் குறித்த விமர்சனம்
நிறைய பேர் அண்ணாமலை அரசியல் பேசவில்லை என்கிறார்கள். அவர் அரசியல் பேச வேண்டும் என்கின்றனர். இந்த உலகத்தில் அரசியல் பேசுவதுதான் மிகவும் எளிமையான வேலை.
இன்று அரசியல் எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளுங்கட்சி சரியில்லை என்றும், ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்க்கட்சி சரியில்லை என்றும் கூறுவது வழக்கமாக உள்ளது. இந்த அரசியலை பேசுவதற்காக அண்ணாமலை ஏன் அங்கு செல்ல வேண்டும்?
நாம் இந்த அரசியலை செய்வோம். அடிப்படை மாற்றத்துக்கான அரசியலை செய்வோம். இப்போது தமிழகத்தில், மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, ஒரு புரட்சி நடந்துள்ளது. முதல்வர் ஆட்சிக்கு வந்துள்ளார். அவர்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள் என்று அனைவரிடமும் சொல்கிறேன்.
108 எம்.எல்.ஏ.க்கள் முதல்முறையாக சட்டசபைக்கு வந்துள்ளனர். 234 பேரில் 154 பேர் புதிதாக வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுப்போம். அவர்கள் வேலையை செய்யட்டும். வேலையை செய்யவில்லை என்றால், முதல் குற்றச்சாட்டை வைப்பது நாமாகத்தான் இருப்போம்.
இன்று தமிழகத்தில் நீங்கள் அரசியல் செய்யவில்லை என்று என்னிடம் எதிர்க்கட்சி நண்பர்கள் கூறுகின்றனர். ஆளுங்கட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வருவதுதான் எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது. 10 எம்.எல்.ஏ.க்களை பிடித்து வந்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கின்றனர்.
தவறாக ஆட்சி செய்தால் அரசு தானாகவே கவிழும். ஒரு வருடம் ஆட்சி செய்யட்டும். காலில் வெந்நீரை ஊற்றியது போல் சுற்றிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
### அமித்ஷா சொன்னது என்ன?
இன்னும் சிலர் அண்ணாமலை பா.ஜ.க.வின் ‘பி டீம்’ என்கின்றனர். அமித்ஷா என்னிடம் ஒரு விஷயம் கூறினார். என்னை டெல்லிக்கு வருமாறு அழைத்தார். டெல்லியில் பொறுப்பு ஏற்குமாறும், மூன்றரை ஆண்டுகள் டெல்லியில் இருக்க வேண்டும் என்றும் கூறினார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
சிலர் அமெரிக்கா செல்வதாகக் கூறுகின்றனர். டெல்லிக்கே செல்லாத நான் அமெரிக்கா செல்வேனா?
அரசியல் செய்யும்போது கொள்கையுடன்தான் அரசியல் செய்துள்ளேன். பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்தபோது மேகதாது அணை கட்டும் முயற்சி நடைபெற்றது. அப்போது கர்நாடக பா.ஜ.க. அரசை எதிர்த்து தமிழக பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தினேன்.
கட்சியில் இருந்தபோதும் சரி, கட்சியில் இல்லாதபோதும் சரி, தமிழினத்திற்காக மட்டும் நின்று இருப்போம். நிற்போம். மாற்றத்துக்காக உங்களுடன் இருப்போம். பின்புற வாசல் வழியாக ஆட்சியில் அமர்ந்து அதிகாரத்தின் சுவையை அனுபவிப்பது தவறு. பாவம். மக்களுடன் இருந்து பணியாற்றி, மக்களால் தேர்வு செய்யப்படும் அமைப்பாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு இருக்கும்.
மேகதாது அணை கட்டுவதை இன்றும் எதிர்க்கிறோம். இதனை அரசியலுக்காக கூறவில்லை. மேகதாதுவை எதிர்க்கிறோம் என்று கூறினால் மத்திய அரசு நம்புகிறோம். இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை ஏற்படும் போது, ஒரு மாநிலம் அணை கட்டுவதை கீழ்ப்பாசன மாநிலங்கள் எதிர்த்தால் அணை கட்ட முடியாது.
2021-2022-ல் அணை கட்ட முடியாது என்று கூறிய மத்திய அரசு, தற்போது கர்நாடகா அணை கட்டுவது பிரச்னை இல்லை என்று கூறுவது மனம் வலிக்கிறது. பிரதமர் மோடி இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பேசி முடிவு காண வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire