Paristamil Navigation Paristamil advert login

‘திமாகி நக்சல்கள்’ என்ற சொல்லாடல் வைரல்

‘திமாகி நக்சல்கள்’ என்ற சொல்லாடல் வைரல்

16 ஆவணி 2026 ஞாயிறு 22:00 | பார்வைகள் : 161


பிரதமர் மோடி பயன்படுத்திய ‘திமாகி நக்சல்கள்’ என்ற சொல்லாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ‘திமாகி நக்சல்’ (Dimagi Naxals) என்ற முக்கியமான சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார். ஹிந்தியில் ‘திமாக்’ என்றால் அறிவு என்று பொருள். எனவே, ‘திமாகி நக்சல்’ என்றால் ‘அறிவுஜீவி நக்சல்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது.

நக்சல்கள் என்றாலே ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என்ற அடையாளம் உள்ளது. அப்படியிருக்க, ‘அறிவுஜீவி நக்சல்’ என்றால் என்ன என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. பிரதமர் மோடியின் உரையைத் தொடர்ந்து, இதுகுறித்து பலரும் இணையதளங்களில் தேடத் தொடங்கியுள்ளனர். இதனால் ‘திமாகி நக்சல்கள்’ என்ற வார்த்தை இணையத்தில் மட்டுமின்றி, அரசியல் தளத்திலும் அதிகளவில் பேசுபொருளாகியுள்ளது.

பிரதமர் மோடி இந்த சொல்லாடலைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இணையதளங்களில் ‘திமாகி நக்சல்கள்’ குறித்த தேடல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆயுதம் ஏந்திய நக்சலிசம் என்ற பதம் முடிவுக்கு வந்துள்ள சூழலில், ஆயுதங்கள் ஏதுமின்றி அறிவுசார்ந்த வழிகளில் இளைஞர்களைத் திசைதிருப்புபவர்கள் அல்லது குழப்புபவர்களே ‘திமாகி நக்சல்கள்’ என்று குறிப்பிடப்படுகின்றனர்.

### திமாகி நக்சல்கள் யார்?

திமாகி நக்சல்கள் யார் என்பது குறித்து உத்தரப் பிரதேச முன்னாள் டிஜிபியும், பாஜக எம்பியுமான பிரிஜ்லால் கூறியிருப்பதாவது:

காடுகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களைவிட அறிவுஜீவி நக்சல்கள் ஆபத்தானவர்கள். அவர்கள் நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். வன்முறை சித்தாந்தங்களைப் பரப்புவதற்குப் பதிலாக, தங்களின் அறிவை முழுமையாக நம்பி செயல்படுபவர்கள்.

திமாகி நக்சல்கள் அடர்ந்த வனப்பகுதிகளிலோ, காடுகளிலோ வசிப்பதில்லை. அவர்கள் ஆயுதங்களை ஏந்துவதும் இல்லை. நகரங்களில் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுகின்றனர். கட்டுரைகள் எழுதுவது, மாநாடுகளை நடத்த ஏற்பாடு செய்வது உள்ளிட்ட செயல்களின் மூலம் தங்களது வன்முறை சித்தாந்தங்களை குறிப்பாக இளைஞர்களிடம் பரப்புகின்றனர்.

இவர்களுக்கு எதிராகப் போராடுவது கடினமாக உள்ளது. எனவே, காடுகளில் வசிக்கும் நக்சல்களைவிட இவர்கள் ஆபத்தானவர்கள். நாட்டின் ஜனநாயகம், நீதித்துறை, ராணுவம், அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்டவற்றின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் கருத்துகளை இளைஞர்கள் மத்தியில் பரப்புகின்றனர். தங்களின் அறிவுசார் திறன்களின் மூலம், வன்முறைச் செயல்களில் ஈடுபட இளைஞர்களைத் திசைதிருப்புகின்றனர்.

இதுபோன்ற திமாகி நக்சல்களிடம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் நக்சல்களைப் புகழ்ந்து பேசியும், எழுதியும், குழப்பமான சூழலைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்காக நிதி திரட்டுவார்கள்.

இவ்வாறு பிரிஜ்லால் கூறியுள்ளார்.