Paristamil Navigation Paristamil advert login

நாளொன்று வரும்; முழு சிந்துவும் நமதாகும்: துணை ஜனாதிபதி

நாளொன்று வரும்; முழு சிந்துவும் நமதாகும்: துணை ஜனாதிபதி

17 ஆவணி 2026 திங்கள் 07:02 | பார்வைகள் : 167


‘களும்’ நூல் வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நூலை வெளியிட்டு பேசியதாவது:

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான பயணமே வாழ்க்கை. ராமனாக இருந்தாலும், கிருஷ்ணனாக இருந்தாலும், யாராக இருந்தாலும், ஒரு நாள் இந்த மண்ணை விட்டு பிரிந்துதான் ஆக வேண்டும்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான வாழ்க்கைப் பயணத்தில், இந்த சமுதாயத்தின் நலனுக்காகவும், புராதன கலாசாரம் மற்றும் அதன் மேன்மையை பாதுகாப்பதற்காகவும் நாம் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்க்கை சரித்திரமாக மாறும். அவ்வாறு தனக்காக வாழாமல், சமுதாயத்திற்காக ராம கோபாலன் வாழ்ந்தார்.

மதமாற்றத்தைத் தடுக்கவும், கடவுள் மறுப்புக்கு எதிராகவும் வலிமையுடன் போராடுவதற்காகவே அவர் 1980-ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பைத் தொடங்கினார். அப்போது நம்மை வரவேற்பவர்கள் யாரும் இல்லை. நம்மை வர வேண்டாம் என்று சொல்பவர்களே அதிகமாக இருந்தனர். நமது கருத்துகளுக்கு செவி கொடுப்பவர்களும் இல்லை.

அத்தகைய சூழலில், நல்ல கருத்துகள் இளைஞர்களைச் சென்றடைய வேண்டும் என்றும், அவர்களின் ஆழ்மனதில் நல்ல விதைகளாக அவை விதைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்பினார். அதன் மூலம் அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான, உயர்ந்த சிந்தனை உருவாக வேண்டும் என்பதற்காக ராம கோபாலன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

‘சனாதனம் இந்த மண்ணின் சொத்து; அதை விட்டுக்கொடுக்கக் கூடாது’ என்ற சிந்தனையே அவரை வழிநடத்தியது. நம் ஒவ்வொருவரின் மனதிலும், ‘என்று காண்போம் எங்கள் சிந்துவை’ என்ற உணர்வை அவர் ஊட்டி வந்தார். நாளொன்று வரும்; முழு சிந்துவும் நமதாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் வன்னியராஜன், இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் விமூர்த்தானந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.