Paristamil Navigation Paristamil advert login

விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது: மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது: மயில்சாமி அண்ணாதுரை

17 ஆவணி 2026 திங்கள் 08:06 | பார்வைகள் : 147


விண்வெளித் துறையில் தனியார் துறையை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ முன்னாள் தலைவரும், தமிழக அரசின் பாடத்திட்ட வழிகாட்டுக் குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை புதுக்கோட்டையில் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:

இஸ்ரோவில் பல்வேறு வகையான விண்கலங்கள் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணைகளுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் பணியைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை மத்திய அரசும், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகளும் அரசு சார்பிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது தனியார் பங்களிப்புடன் இப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விண்வெளித் துறையில் தனியார் துறையை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது.

மாணவர்கள் எழுதுதல், படித்தல், பேசுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறம்பட செயல்படும் மாணவர்களை உருவாக்கும் நோக்கத்திலும் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு ஏதுவாக பல்வேறு முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.