Paristamil Navigation Paristamil advert login

வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக சோனியா மீது புகார்

வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக சோனியா மீது புகார்

17 ஆவணி 2026 திங்கள் 09:10 | பார்வைகள் : 308


தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டபோது, அதை பாதியிலேயே நிறுத்துமாறு சைகை காட்டியதாக காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா மீது கர்நாடக போலீசில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சோனியா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா நேற்று முன்தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 13-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழாவில் முதல் முறையாக ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடல் முழுமையாக இசைக்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், முழுப் பாடலும் இடம்பெற்றது முக்கியத்துவம் பெற்றது.

இதனிடையே, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரஸ் தேசியத் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன்பு ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது. அப்போது சோனியாவும், கார்கேவும் தங்களைச் சுற்றி இருந்தவர்களைப் பார்த்து, பாடல் இசைக்கப்படுவதை நிறுத்துமாறு சைகை காட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ராகுலும் அதேபோன்று சைகை காட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை அப்போது அங்கிருந்த கேமராக்கள் பதிவு செய்த நிலையில், மூவரும் சைகை செய்தது தெளிவாகத் தெரிந்ததாக கூறப்படுகிறது. ‘வந்தே மாதரம்’ பாடலை பாதியிலேயே நிறுத்துமாறு அவர்கள் சைகை செய்ததாக பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

இதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், ‘வந்தே மாதரம் பாடலுக்கு சோனியா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கார்கே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால், அவருக்கு ஒரு நாற்காலியை வழங்குமாறு சைகை செய்தார். இதை பா.ஜ.க.வினர் தவறாகப் புரிந்துகொண்டனர்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலை அவமதித்ததாகக் கூறி சோனியாவுக்கு எதிராக கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள உர்வா காவல் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சோனியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சோனியா மீது புகார் அளித்த பா.ஜ.க. நிர்வாகி விகாஷ் புத்தூர் கூறியதாவது:

டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியின்போது, ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக இசைக்கவிடாமல், பாதியிலேயே நிறுத்துமாறு சோனியா கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

சோனியாவின் செயலுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளோம். அவர் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால், உயர் நீதிமன்றத்தை நாடுவேன். ‘வந்தே மாதரம்’ தேசிய கீதத்திற்கு இணையானது. ‘வந்தே மாதரம்’ மீது காங்கிரசுக்கு ஆரம்பத்தில் இருந்தே வன்மம் உள்ளது. 1937-ம் ஆண்டிலேயே முழுப் பாடலையும் பாட முடியாத வகையில் சில வரிகள் காங்கிரஸ்காரர்களால் நீக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.