Paristamil Navigation Paristamil advert login

கோவில் நிலங்களில் சூரிய மின் உற்பத்தி: அறநிலையத்துறை முடிவு

கோவில் நிலங்களில் சூரிய மின் உற்பத்தி: அறநிலையத்துறை முடிவு

17 ஆவணி 2026 திங்கள் 12:31 | பார்வைகள் : 149


கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. இவற்றில் வேளாண் பணிகள் நடைபெறாமல் காலியாக உள்ள நிலங்களைப் பயன்படுத்தி, சூரிய மின் சாதனங்களை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த மாதம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற சீராய்வுக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஒரே இடத்தில் 10 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் கோவில் நிலம் இருந்தால், அதன் விவரங்களை அனுப்பி வைக்குமாறு மண்டல இணை ஆணையர்களுக்கு துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த நிலங்களில் சூரிய மின் சாதனங்களை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்து, அதை மின் வாரியத்திற்கு வழங்குவதன் மூலம் கோவில் வருவாயை அதிகரிக்க முடியும். அதே நேரத்தில், கோவில் நிலங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று துறை கமிஷனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவில் நிலங்களுக்கு வேலி அமைத்து அவற்றை பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.