Paristamil Navigation Paristamil advert login

மாணவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு – மாதம் 1,300 யூரோக்கள் வரை செலவாகும் அதிர்ச்சித் தகவல்!!

மாணவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு – மாதம் 1,300 யூரோக்கள் வரை செலவாகும் அதிர்ச்சித் தகவல்!!

17 ஆவணி 2026 திங்கள் 07:36 | பார்வைகள் : 268


மாணவர்களின் வாழ்க்கைச் செலவு 2026ஆம் ஆண்டில் மேலும் 1.66% அதிகரித்துள்ளதாக மாணவர் சங்கமான Unef தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தச் செலவு 35%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அரசின் உதவித் தொகைகள் கிடைத்த பின்னரும், ஒரு மாணவருக்கு மாதந்தோறும் சராசரியாக 1,300 யூரோக்கள் செலவாகிறது என்றும், இது கடந்த ஆண்டை விட 74 யூரோக்கள் அதிகம் என்றும் Unef வெளியிட்டுள்ள வருடாந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் செலவு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக வீட்டு வாடகை, போக்குவரத்து மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை Unef சுட்டிக்காட்டியுள்ளது. தனியார் வீடுகளில் மாணவர்கள் செலுத்தும் மாத வாடகை சராசரியாக 627.11 யூரோக்களாக உயர்ந்துள்ளது. Crous மாணவர் விடுதிகளில் சராசரி வாடகை 426.36 யூரோக்களாக உள்ளது. மேலும், உதவித்தொகை பெறாத மாணவர்களின் போக்குவரத்துச் செலவு சராசரியாக 278.59 யூரோக்களாகவும், உணவுப் பொருட்களின் விலை 0.87% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2017ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகக் கட்டணங்களும் 37% உயர்ந்துள்ளதாக Unef தெரிவித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்விச் செலவு மேலும் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் சங்கம் கூறியுள்ளது. மாணவர்கள் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க படிப்புடன் வேலை செய்ய வேண்டிய நிலை அல்லது பணப் பற்றாக்குறையால் கல்வியையே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக Unef எச்சரித்துள்ளது.