Paristamil Navigation Paristamil advert login

ஸ்டார்ட்அப் டிஎன் தலைமை பதவிக்கு த.வெ.க.,வில் போட்டி

ஸ்டார்ட்அப் டிஎன் தலைமை பதவிக்கு த.வெ.க.,வில் போட்டி

18 ஆவணி 2026 செவ்வாய் 08:39 | பார்வைகள் : 198


தமிழகத்தில், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என். அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பதவியை கைப்பற்ற, த.வெ.க. நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தமிழக இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ‘ஸ்டார்ட்அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்களை தொடர்ந்து தொடங்கி வருகின்றனர். இத்தகைய நிறுவனங்களுக்கு தேவையான நிதியுதவி, முதலீட்டாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை ஸ்டார்ட்அப் டி.என். நிறுவனம் வழங்கி வருகிறது.

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, தொழில்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தலைமை செயல் அதிகாரியாக இருந்த சிவராஜா ராமநாதன் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிப்பதற்காக தமிழக அரசு விண்ணப்பங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், அந்தப் பதவியை கைப்பற்ற த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புத்தொழில் முனைவோர் கூறியதாவது:

கடந்த தி.மு.க. ஆட்சியின்போதுகூட, ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கட்சியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவில்லை. அரசியல் தலையீடுகள் இன்றி அந்நிறுவனம் செயல்பட்டதன் காரணமாக, 2021ல் தமிழகத்தில் 2,032 ஆக இருந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 15,000ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும், கலை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. இதன் காரணமாக, மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அவர்களில் பலர் சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே, ஸ்டார்ட்அப் டி.என். நிறுவனம் அரசியல் சார்பின்றி செயல்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பம், புத்தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களை தலைமை செயல் அதிகாரியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2