Paristamil Navigation Paristamil advert login

சட்டசபையில் அமைச்சர்கள் பல திட்டங்கள் அறிவிப்பு!

சட்டசபையில் அமைச்சர்கள் பல திட்டங்கள் அறிவிப்பு!

18 ஆவணி 2026 செவ்வாய் 09:42 | பார்வைகள் : 155


காலி மனைகளில் வீடு கட்டி வசிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்படும். சுகாதாரத் துறையில் புதிய பொது சுகாதார சட்டம் கொண்டு வரப்படும். 70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் முதியோருக்கு வருமான உச்சவரம்பின்றி இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில், ‘முதல்வரின் முதியோர் காப்பீட்டு திட்டம்’ செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை, வருவாய் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் நேற்று சட்டசபையில் வெளியிட்டனர்.

சட்டசபையில் நேற்று வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர், தங்களது துறைகளுக்கான புதிய திட்டங்களை அறிவித்தனர்.

### வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

* வருவாய் துறை சான்றிதழ்களை விரைவாக வழங்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள நான்கு நிலை முறைக்கு பதிலாக, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் அல்லது தாசில்தார் என மூன்று நிலைகளாக நடைமுறை மாற்றப்படும்.

* விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலவரி வசூல், 1436 பசலி ஆண்டு முதல் ரத்து செய்யப்படும்.

* கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்படும்.

* கிராம நத்தம் காலி மனைகளில் வீடு கட்டி வசித்து வரும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* கணினிமயமாக்கலின்போது நத்தம் நிலப் பதிவேடுகளில் ஏற்பட்டுள்ள பிழைகளை சரிசெய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* நில அளவை பணிகளை விரைவுபடுத்தும் வகையில், களப்பணியாளர்களுக்கு 136.68 கோடி ரூபாய் மதிப்பில் நவீன கருவிகள் வழங்கப்படும்.

* நில அளவை மற்றும் பட்டா வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள, 1,500 பேருக்கு நில அளவைப் பயிற்சி அளித்து உரிமம் வழங்கப்படும்.

### புயல் பாதுகாப்பு மையங்கள்

* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடும்போது தாக்குதலுக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையில், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்.

* பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் 25 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* கிராம நிர்வாக அலுவலகங்களின் பராமரிப்புக்காக மாதம் 1,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும்.

* தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், கல்வி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்கான அறக்கட்டளைகள் வசம் உள்ள நிலங்களுக்கு அரசின் அனுமதி கிடைக்கும் வகையில், நில உச்சவரம்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

* ஒருங்கிணைந்த பேரிடர் மற்றும் நிகழ்நேர தகவல் சேகரிப்பு அமைப்பு 80 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

* தமிழக பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் சிறப்பு திறன் மையம் அமைக்கப்படும்.

* பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப அமைப்பு 16.53 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

* தமிழகத்தில் நிலச்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்கான திட்டம் 50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

* கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் வெள்ளத் தணிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை 3.90 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்.

### மக்கள் நல்வாழ்வுத்துறை

* தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் இயற்றப்பட்டு 87 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போதைய சுகாதார சவால்கள் மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப புதிய தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் இயற்றப்படும். இதில், வீடு அல்லது மருத்துவமனை அல்லாத இடங்களில் சுயமாக பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்ற புதிய பிரிவு சேர்க்கப்படும்.

* உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ சுற்றுலா, ஆயுஷ் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் வகையில் ‘தமிழ்நாடு மருத்துவ நகரம்’ அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

* மருத்துவ நிறுவனங்கள் சட்டம் இயற்ற 16.06 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

* 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

### முதியோர் காப்பீட்டு திட்டம்

* 70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் முதியோருக்கு வருமான உச்சவரம்பின்றி இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில், ‘முதல்வரின் முதியோர் காப்பீட்டு திட்டம்’ செயல்படுத்தப்படும்.

* 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 14 வகையான உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

* 1,090 மருந்தாளுனர்கள், 999 செவிலிய உதவியாளர்கள் உட்பட மொத்தம் 3,594 பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்.

* வீடுகளுக்கே சென்று ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யும் சேவைகள் பொது-தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்படும்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் 16.5 லட்சம் வளரிளம் மாணவ, மாணவியருக்கு ரத்த சோகையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் ‘இரும்பு கண்மணி திட்டம்’ 6.37 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

### இலவச இன்சுலின்

* கர்ப்பிணிகள் வீட்டில் இருந்தபடியே பயன்படுத்தும் வகையில், ப்ளூடூத் வசதியுடன் கூடிய ரத்த அழுத்தம் அளவிடும் கருவிகள் வழங்கப்படும்.

* மாதவிடாய் விலக்கு காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க, ‘மாதவிடாய் விலக்கு ஆற்றுப்படுத்துதல் கொள்கை’ செயல்படுத்தப்படும்.

* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும்.

* 5,000 டாக்டர்கள் மற்றும் 12,456 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி அளித்து, ஆட்டிசம் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் இல்லாத இலக்கை அடையும் வகையில், ‘தொழுநோய் கண்டறிதல் இயக்கம்’ செயல்படுத்தப்படும்.

* பெற்றோர் இருவரையும் இழந்து எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம் 3,000 ரூபாயும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாயும் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர்கள் சட்டசபையில் அறிவித்தனர்.
 

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : -

இறப்பு : 17 Aug 2026