விதிமீறல்: மெட்டாவுக்கு சட்ட பாதுகாப்பு இல்லை
19 ஆவணி 2026 புதன் 11:03 | பார்வைகள் : 162
குழந்தைகள் தொடர்பான பாலியல் பதிவுகளை அனுமதித்து விதிமீறலில் ஈடுபட்டால், ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் ‘மெட்டா’ நிறுவனத்துக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு நீக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
குழந்தைகளை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் பதிவுகளை கட்டுப்படுத்துவது, சமூக ஊடகங்களில் பதிவாகும் உள்ளடக்கங்களை கண்காணிப்பது, ‘வாட்ஸாப் யூசர் நேம்’ வசதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, ‘மெட்டா’ நிறுவனத்தின் சர்வதேச குழுவினருடன் மத்திய அரசு சமீபத்தில் தொடர் ஆலோசனைகளை நடத்தியது.
இதைத்தொடர்ந்து, குழந்தைகளை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் பதிவுகள் தொடர்பாக ‘மெட்டா’ நிறுவனம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
### நிலைப்பாடு
மெட்டா அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
குழந்தைகள் தொடர்பான பாலியல் பதிவுகள் விவகாரத்தில் மெட்டா நிறுவனம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், விதிமுறைகளை மீறினால் சட்டப் பாதுகாப்பு வழங்கப்படாது என்பதே மத்திய அரசின் தெளிவான நிலைப்பாடாகும்.
மெட்டாவின் ‘அல்காரிதம்’ எனப்படும் கணினி நிரல் மற்றும் பதிவுகள் தொடர்பாக முடிவெடுக்கும் நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தியாவின் மொழி மற்றும் கலாசார வேறுபாடுகளை கருத்தில் கொண்டே சமூக வலைதளப் பதிவுகளை கண்காணிக்கும் முறைகள் உருவாக்கப்பட வேண்டும். உலகளாவிய நடைமுறைகளை மட்டும் பின்பற்றக் கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக அல்ல. இந்திய சட்டங்களுக்கு நிறுவனங்கள் கட்டுப்படுவதையும், சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதையும் உறுதி செய்வதே இதன் நோக்கம்.
### பரிசீலனை
‘வாட்ஸாப்’ செயலியில் மொபைல் போன் எண்ணைப் பயன்படுத்தாமல், ‘யூசர் நேம்’ மூலம் செய்திகளை அனுப்பும் தொழில்நுட்ப வசதி குறித்தும் மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் ஆள்மாறாட்டம், இணைய மோசடி மற்றும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது.
இது மெட்டா நிறுவனத்துக்கு மட்டுமே தொடர்புடைய விவகாரமாக கருதப்படவில்லை. இதுபோன்ற வசதிகள் பிற தகவல் பரிமாற்ற செயலிகளிலும் அறிமுகமாகலாம் என்பதால், பொதுவான விவகாரமாகவே இது பரிசீலிக்கப்படுகிறது.
மேலும், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் பதிவுகளில் அவை செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்பதை தெளிவாகக் குறிப்பிடும் அடையாளம் இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பயனர்கள் தாங்கள் பார்க்கும் பதிவு உண்மையானதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
### பதிவு நீக்க காரணம் வெளிப்படையாகிறது!
‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், அரசு கோரும் பதிவுகளை நீக்குவது அல்லது கணக்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பான தகவல்களை பயனர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் புதிய நடைமுறையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி, எந்த அரசு அமைப்பு குறிப்பிட்ட பதிவை நீக்கவோ அல்லது கணக்குக்கு கட்டுப்பாடு விதிக்கவோ கோரியது, அதற்கான சட்ட காரணம் என்ன என்பது உள்ளிட்ட தகவல்களை பயனர்கள் அறிந்து கொள்ள முடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire