Paristamil Navigation Paristamil advert login

எல் நினோ, மேற்காசிய போரால் வளர்ச்சி 6.8% ஆக குறையும்

எல் நினோ, மேற்காசிய போரால் வளர்ச்சி 6.8% ஆக குறையும்

19 ஆவணி 2026 புதன் 13:08 | பார்வைகள் : 161


மேற்காசியாவில் நிலவும் போர், உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் எல் நினோவின் தாக்கம் ஆகிய காரணங்களால், நடப்பு 2026-27-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.80 சதவீதமாக குறையும் என இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம் கணித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2025-26-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.60 சதவீதமாக இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் இது 6.80 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட 6.70 சதவீத கணிப்புடன் ஒப்பிடும்போது, தற்போதைய வளர்ச்சி கணிப்பு சற்று அதிகரித்துள்ளது.

ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் எல் நினோவின் தாக்கம் காரணமாக வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

அதே நேரத்தில், கச்சா எண்ணெய் விலை குறைவது வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்து பொருளாதாரத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கும். ஆனால், எல் நினோவின் தாக்கத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், குறைந்த கச்சா எண்ணெய் விலையால் கிடைக்கும் வளர்ச்சி சாதகத்தின் தாக்கம் குறையக்கூடும்.

நடப்பு நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சராசரி மதிப்பு 93.98 ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூபாயின் சராசரி மதிப்பு 94.28 ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இது ஆண்டுக்கு 6.40 சதவீத ரூபாய் மதிப்பு சரிவை குறிக்கிறது.

மேலும், கடந்த நிதியாண்டில் 2 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் சராசரியாக 4.90 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.
 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2