Paristamil Navigation Paristamil advert login

சென்னை - ஹவுரா நான்கு வழி ரயில் பாதைக்கு ஒப்புதல்

சென்னை - ஹவுரா நான்கு வழி ரயில் பாதைக்கு ஒப்புதல்

20 ஆவணி 2026 வியாழன் 08:08 | பார்வைகள் : 190


சென்னை - மேற்கு வங்காளத்தின் ஹவுரா இடையே நான்கு வழி ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டங்களில் முதல் நான்கு திட்டங்கள் ரயில்வே துறையைச் சேர்ந்தவை. ஐந்தாவது திட்டம் நெடுஞ்சாலைத் திட்டமாகும்.

ஹவுரா - சென்னை இடையேயான முக்கிய ரயில் வழித்தடத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றும் திட்டம் இதில் அடங்கும். மற்றொரு திட்டமாக கட்டாக் - பாரதீப் வழித்தடத்தில் 3-வது மற்றும் 4-வது ரயில் பாதைகளை அமைத்து, அந்த வழித்தடத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஐந்தாவது திட்டத்தில், பீகாரின் முசாபூரில் இருந்து சீதாமர்ஹி வழியாக நேபாள எல்லைக்கு அருகில் உள்ள சோன்பர்சா வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.13,041 கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

### ஹவுரா - சென்னை ரயில் வழித்தடம்

ஹவுரா - சென்னை இடையேயான ரயில் வழித்தடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் ரயில்வே வலையமைப்பில் முக்கியமான 7 ரயில் வழித்தடங்கள் உள்ளன.

ஹவுரா முதல் சென்னை வரையிலான ரயில் பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்க முடியும். மேலும், சரக்குகளை எளிதாக கொண்டு செல்லவும், ரயில் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் வசதி ஏற்படும்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்டங்களில் முதல் 3 திட்டங்கள் ஹவுரா - சென்னை வழித்தடத்தைச் சேர்ந்தவை. 4-வது திட்டம் பாரதீப் - கட்டாக் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

### வேலைவாய்ப்பு

ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே நான்கு வழி ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த 90 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடம் தற்போது இரு வழிப்பாதையாக உள்ளது. இப்பகுதியில் இயந்திரம், ஆட்டோமொபைல், மருந்து, ரசாயனம் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன.

இந்த வழித்தடத்தை நான்கு வழி ரயில் பாதையாக மாற்ற ரூ.2,229 கோடி செலவாகும். இதன் ஒரு பகுதியாக ஸ்வர்ணமுகி நதியின் குறுக்கே 360 மீட்டர் நீளத்தில் மெகா பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் அந்தப் பகுதியில் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் 61 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2