Paristamil Navigation Paristamil advert login

மேகதாதுக்காக 9 லட்சம் மரங்கள் வெட்ட முடிவு!

மேகதாதுக்காக 9 லட்சம் மரங்கள் வெட்ட முடிவு!

20 ஆவணி 2026 வியாழன் 10:47 | பார்வைகள் : 220


மேகதாது அணை திட்டத்துக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக காங்கிரஸ் அரசு, மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், அணை கட்டுவதற்காக 12,500 ஏக்கர் வனப்பகுதி பயன்படுத்தப்படுவதுடன், 8.90 லட்சம் மரங்கள் வெட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

### தமிழகம் எதிர்ப்பு

இதற்கிடையே, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி லோக்சபாவில் தெரிவித்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேகதாது அணை திட்டத்துக்காக கர்நாடக அரசு ஏற்கனவே சமர்ப்பித்திருந்த திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பியது. அந்த அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், அவற்றை சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு நேற்று முன்தினம் மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன், மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.

அப்போது திட்டத்தின் தற்போதைய நிலை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அணை கட்டுவதற்காக வனப்பகுதி நிலங்களை அழிப்பது, மரங்களை வெட்டி அகற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

### 12,500 ஏக்கர் வனப்பகுதி

மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை திட்டத்துக்காக 12,500 ஏக்கர் வனப்பகுதி பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக அகற்றப்படும் மரங்களுக்கு மாற்றாக, தட்சிண கன்னடா மற்றும் ஷிவமொக்கா மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வனப்பகுதி மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 8.90 லட்சம் மரங்கள் வெட்டப்படும் என்றும், இதில் 7 லட்சம் சிறிய மரங்களும், 1 லட்சம் பெரிய மரங்களும் அடங்கும் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அணை கட்டுவதற்காக லட்சக்கணக்கான மரங்களை வெட்டினால், மழை எங்கிருந்து பெய்யும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக கன்னட ஊடகங்கள் நேற்று வீடியோவுடன் செய்தி வெளியிட்டன. இதனை மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “நானும் மாண்டியாவைச் சேர்ந்தவன். முதல்வரும் காவிரி படுகை பகுதியைச் சேர்ந்தவர். விவசாயிகளை பாதுகாப்பது எங்கள் பொறுப்பு. அதே நேரம் இயற்கையுடன் நாம் விளையாட முடியாது,” என்றார்.
 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2