Paristamil Navigation Paristamil advert login

ஊழல் கோப்புகளை விஜய் வெளியிடுவார்: ராஜ்மோகன்

ஊழல் கோப்புகளை விஜய் வெளியிடுவார்: ராஜ்மோகன்

21 ஆவணி 2026 வெள்ளி 13:57 | பார்வைகள் : 152


சட்டசபையில் ஊழல் கோப்புகள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், ஊழல் கோப்புகளை முதல்வர் விஜய் நிச்சயம் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது:-

ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். வரலாற்றில் இல்லாத வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களைவிட ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளே அதிகமாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சி சார்பில் ஒரு கேள்வி எழுப்பினால், அமைச்சர்கள் ஆச்சரியப்படும் வகையில் பதில்களை அளிக்கிறார்கள். தற்போது பாடல்கள்கூட பாடுகிறார்கள். இது சட்டசபையா அல்லது வேறு நிகழ்ச்சியா என்று தெரியவில்லை.

சில தினங்களுக்கு முன்பு அவையில் பேசிய முதல்வர், தனது மேசையில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை திறந்து பார்க்க வைத்துவிட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை நோக்கி குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த கோப்புகளை தயவு செய்து திறந்து பாருங்கள். அவற்றின் மீது நடவடிக்கை எடுங்கள். எதற்காக பயப்படுகிறீர்கள்? ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? இதையே 3 மாதங்களாக கூறிக்கொண்டிருக்கிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான் அந்த கோப்புகளை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

இவ்வாறு உதயநிதி பேசினார்.

இதற்கு பதிலளித்த நிர்மல்குமார், “ஜோசியம் என்று பேசுகிறார்கள்; ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும். எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அப்போது சரியான நேரத்தில் எடுப்போம்” என்று காரசாரமாக தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் நடைபெறும் அனைத்தும் மக்களுக்கு தெரிய வேண்டும். யார் எந்த தொகுதியின் சார்பாக கேள்வி எழுப்புகிறார்கள், அதற்கு என்ன பதில் அளிக்கப்படுகிறது என்பதும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே நேரலை வழங்குகிறோம்.

இந்த நேரலை வெறும் ஆளும் கட்சிக்கு சாதகமானதாக இல்லாமல், முழுமையான நேரலையாக இருப்பதை தவெக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். கோப்புகளை திறப்பதில் முதல்வருக்கு எந்த தயக்கமும் இல்லை.

ஊழல் கோப்புகளை முதல்வர் விஜய் நிச்சயமாக வெளியிடுவார். எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையையும் முதல்வர் விஜய் நிறைவேற்றுவார்.

இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.

**நடவடிக்கை**

சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட விவரங்களை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2