Paristamil Navigation Paristamil advert login

திருமலை பாதையில் ரோபோ நாய்: தேவஸ்தானம் ஆய்வு

திருமலை பாதையில் ரோபோ நாய்: தேவஸ்தானம் ஆய்வு

22 ஆவணி 2026 சனி 10:23 | பார்வைகள் : 210


திருப்பதி திருமலை சேஷாசலம் வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், ஏழுமலையான் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ரோபோ நாய்’ பயன்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான அதிநவீன சோதனை ஓட்டம் நேற்று அதிகாரிகள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

**பக்தர்களுக்கு பாதுகாப்பு**

திருப்பதி அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது பக்தர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு கால்கள் கொண்ட ரோபோ நாயை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று இந்த ரோபோ நாயை வடிவமைத்துள்ளது.

**அதிகாரிகள் ஆய்வு**

இந்த ரோபோவின் செயல்விளக்க சோதனையை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மலையடிவாரப் பாதைகள், பாறைகள் நிறைந்த கரடுமுரடான பகுதிகளில் ரோபோ நாய் எவ்வாறு செயல்படுகிறது என்பது சோதிக்கப்பட்டது.

**அதிநவீன வசதிகள்**

இருள் மற்றும் பனிமூட்டத்திலும் விலங்குகளை துல்லியமாக கண்டறியும் தெர்மல் மற்றும் ஆப்டிகல் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. வனப்பகுதியில் விலங்குகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டால், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு நேரலை வீடியோ மற்றும் இருப்பிடத் தகவல்களை அனுப்பும் வசதியும் உள்ளது.

மேலும், பக்தர்களை நோக்கி விலங்குகள் வருவதைத் தடுக்கும் வகையில், சத்தம் மற்றும் ஒளியை எழுப்பி அவற்றை காட்டுக்குள் விரட்டும் வசதியும் இந்த ரோபோ நாயில் இடம்பெற்றுள்ளது.

**20 நாட்கள் சோதனை**

இந்த ரோபோ நாய் தற்போது 20 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால், அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவின் போது வனப்பகுதிகளில் பக்தர்களின் பாதுகாப்புக்காக ரோபோ நாய் முழுமையாக பயன்படுத்தப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3